தீப்பிடித்த ஆம்புலன்ஸ்: நோயாளி வெளியேற்றம்!

அரவக்குறிச்சி அருகேயுள்ள பள்ளப்பட்டியில் 108 ஆம்புலன்ஸ் தீப்பிடித்து எரிந்ததால், அதிலிருந்த நோயாளி வெளியேற்றப்பட்டார். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகேயுள்ள பள்ளப்பட்டியைச் சேர்ந்தவர் குமரேசன். இன்று (மே 7) அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் சொல்லப்பட்டது.

 குமரேசனை ஏற்றிக்கொண்டு அரவக்குறிச்சி மருத்துவமனை நோக்கிச் சென்றது ஆம்புலன்ஸ். போகும் வழியில் திடீரென்று ஆம்புலன்ஸ் என்ஜினில் தீப்பற்றியது. வாகனத்தை உடனடியாக நிறுத்திய ஓட்டுநர், அதிலிருந்த நோயாளி, அவருடன் வந்தவர்கள், 2 செவிலியர்கள் ஆகியோரை வெளியேற்றினார்.

 அந்த இடத்தின் அருகேயிருந்த கோயிலில் நோயாளியை தங்க வைத்தார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர். இந்த இடைவெளியில் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வருவதற்குள் கரும்புகையுடன் ஆம்புலன்ஸ் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

அதன்பின், அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் ஆம்புலன்ஸில் பரவிய தீயை அணைத்தனர். ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் சமயோசிதச் செயலால், அதில் இருந்த அனைவரும் காப்பாற்றப்பட்டனர்.
Powered by Blogger.