மெட் காலா: பிரியங்காவை சீண்டும் ரசிகர்கள்!

மெட் காலா நிகழ்வில் கலந்து கொண்ட பிரியங்கா சோப்ரா தான் அணிந்துவந்த ஆடை காரணமாக இணையத்தில் பெரும் விமர்சனங்களைச் சந்தித்து வருகிறார்.
ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முதல் வாரம் நியூயார்க் நகரில் மெட் காலா நிகழ்வு நடைபெறும். உலகம் முழுவதிலுமுள்ள திரைப்பட நடிகர், நடிகைகள், விளம்பர மாடல்கள், ஆடை வடிவமைப்பாளர்கள் ஆகியோர் கலந்துகொள்ளும் வண்ணமயமான இந்த நிகழ்வு பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. நியூயார்க் நகரின் சிறப்பம்சமாக கருதப்படும் இந்நிகழ்வு, அங்குள்ள கலை ஆடை குறித்த பெருநகர அருங்காட்சியத்தின் நன்மைக்காக நடத்தப்படும் பிரம்மாண்ட விழாவாகும்.
ஒவ்வொரு ஆண்டும் விழாவில் பங்கேற்பவர்கள், குறிப்பிட்ட தலைப்புகளின்கீழ் வித்தியாசமான, மிகவும் விலைமதிப்புள்ள ஆடைகளை அணிந்து வருவார்கள். இந்த ஆண்டு ‘கேம்ப்: நோட்ஸ் ஆன் பேஷன்’ என்ற தலைப்பின் கீழ் விழா நடைபெற்றது.
இதில் பாலிவுட் நடிகைகள் பிரியங்கா சோப்ராவும், தீபிகா படுகோனும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். ஒவ்வொரு ஆண்டும் வித்தியாசமான ஆடைகள் அணிந்து அசத்தும் பிரியங்கா தன் கணவரோடு கலந்துகொண்டார். வித்தியாசமான சிகை அலங்காரத்தோடுள்ள அவரது புகைப்படம் குறித்து அவரை கிண்டல் செய்து கமெண்டுகளையும், மீம்ஸ்களையும் பதிவிட்டுவருகின்றனர்.
சர்வதேசப் பாடகர் நிக் ஜோன்ஸ், பிரியங்காவின் காதல் குறித்து 2017ஆம் ஆண்டு மெட் காலா நிகழ்விலிருந்து தான் கிசுகிசுக்கள் பரவத் தொடங்கின என்பது குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.