திருமா கருத்து: திமுக கூட்டணியில் சலசலப்பு!

திமுக உடனான கூட்டணி நிரந்தரமானதல்ல என்ற ரீதியில் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் கருத்து தெரிவித்திருக்கிறார். இது அரசியல் வட்டாரத்தில் விவாதத்துக்கு உள்ளாகியிருக்கிறது. (மே 7) வெளியான டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டுக்கு தொல். திருமாவளவன் அளித்த பேட்டியில் கூட்டணி பற்றி சில கருத்துகளை முன் வைத்திருக்கிறார். “திமுக- விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணி தமிழகம் முழுதும் தலித் வாக்குகளை பெரும்பான்மையாக பெற்றிருக்கிறது.


 பாமக, பாஜக ஆகிய கட்சிகளோடு அதிமுக சென்றுவிட்டதால் அதிமுகவுக்குரிய பாரம்பரிய தலித் வாக்காளர்கள் கூட திமுக அணிக்குதான் வாக்களித்திருக்கிறார்கள்" என்று குறிப்பிட்டுள்ள திருமாவளவன் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் சொல்லியிருக்கிறார். “சட்டமன்றத் தேர்தலுக்கும் மக்களவைத் தேர்தலுக்கும் வேறுபாடுகள் நிறைய இருக்கின்றன. இப்போதுதான் மக்களவைத் தேர்தல் முடிந்திருக்கிற நிலையில் சட்டமன்றத் தேர்தல் பற்றி பேசுவது சரியாக இருக்காது. ஆனாலும் கூட்டணி பற்றி என்னைக் கேட்டீர்கள் என்றால், ஒரு கூட்டணி என்பது பல்வேறு காரணிகளைப் பொறுத்தே அமைகிறது. நாங்கள் இப்போது வளரும் கட்சி. நாட்டின் முக்கிய பிரச்னைகளில் திமுக, அதிமுக என்ன நிலைப்பாடு மேற்கொள்கின்றன என்பதைப் பொறுத்தே நாங்கள் கூட்டணி பற்றி முடிவெடுப்போம்” என்று கூறியிருக்கிறார் திருமாவளவன்.


 மேலும், “அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் எங்களின் முக்கியமான நோக்கம் பாஜகவைத் தோற்கடிக்கவேண்டும் என்பதாக இருந்தது. அதேநேரம் வர இருக்கிற சட்டமன்றத் தேர்தலில் எங்கள் முக்கிய நோக்கம் இதுவாக இருக்காது. ஏனெனில் தமிழகத்தில் பாஜக முதன்மையான கட்சி அல்ல. எனவே சட்டமன்றத் தேர்தலில் எங்களின் பொது நோக்கம் மாறும்” என்று தெரிவித்திருக்கிறார் திருமாவளவன். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விழுப்புரம், சிதம்பரம் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டது. உதயசூரியன் சின்னத்தில் நிற்குமாறு திமுக தலைமை திருமாவளவனை வலியுறுத்திய நிலையில் விழுப்புரத்தில் உதயசூரியன் சின்னத்திலும், தான் போட்டியிடும் சிதம்பரத்தில் தனி சின்னத்திலும் போட்டி என்ற வித்தியாசமான நிலைப்பாடு எடுத்தார் திருமாவளவன்.
1

இதை திமுக தலைமையும் சரி, லோக்கல் நிர்வாகிகளும் சரி ரசிக்கவில்லை என்று அப்போதே தகவல்கள் வந்தன. இந்த சூழலில் திருமாவளவனின் இந்தக் கருத்து திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Powered by Blogger.