ஞானசார தேரருக்கு மன்னிப்பு ஆனந்தசுதாகரனுக்கு...?

சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பு வழங்கியதன் காரணமாக அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.


ஞானசார தேரர் ஒரு பெளத்த துறவி. பெளத்த தர்மத்தின் பிரகாரம் பெளத்த துறவிகள் அன்பு வழி நடத்தல் வேண்டும்.

பெளத்த தர்மத்தைப் போதிக்க வேண்டும். அகிம்சையை நிலைநாட்டுவதே அவர்களின் தலையாய பணி.

எனினும், இலங்கையில் இருக்கக்கூடிய பெளத்த துறவிகளில் கணிசமானவர்கள் அரசியல் பேசுகின்றனர். இனவாதத் தீயை வளர்க்கின்றனர். மதவாதத்தைத் தூண்டி விடுகின்றனர்.

இத்தகைய பெளத்த துறவிகளால் இந்த நாடு மிகப்பெரிய அனர்த்தங்களையும் அவ லங்களையும் சந்திக்க நேர்ந்தது.

இந்நிலையில், நீதிமன்றத்தை அவமதிப்புச் செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஞான சார தேரருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனை பெளத்த துறவிகளுக்கான பாட மாக அமையும் எனப் பலரும் எதிர்பார்த்ததுடன் பெளத்த துறவியாகி விட்டால் எதுவும் செய்யலாம் என்ற நினைப்புக்குச் சாவு மணி அடிக்கப்பட்டு விட்டது என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்தியது.

ஆனால், ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேன தனக்கிருக்கக்கூடிய அதிகாரத்தின் கீழ் ஞானசார தேரருக்குப் பொதுமன்னிப்பு வழங்கி அவரை விடுதலை செய்துள்ளார்.

பரவாயில்லை ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் கீழ் அந்த விடுதலை சாத்திய மாயிற்று. இது பற்றி விமர்சிப்பது காலத்தை வீணடிப்பதாகும்.

அதேவேளை ஞானசார தேரருக்கு வழங்கிய அதே மன்னிப்பை தமிழ் அரசியல்கைதி யாகி சிறைத்தண்டனை அனுபவிக்கும் ஆனந்தசுதாகரனுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்காதது ஏன் என்பதுதான் நம் கேள்வி.

சிறைத் தண்டனையை அனுபவிக்கும் ஆனந்தசுதாகரனின் மனைவி நோய்வாய்ப்பட்டு இறந்து போக, அவரின் இரண்டு சிறு பிள்ளைகளும் தாயை இழந்து வாடுகின்றனர்.

தாய் உயிரோடு இல்லை. தந்தை சிறையில் என்ற மிக இக்கட்டான சூழ்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்த ஆனந்தசுதாகரனின் பிள்ளைகள்; எங்கள் அப்பாவை விடுதலை செய்யுங்கள் என்று ஜனாதிபதியிடம் இரந்து கேட்டனர்.

அதற்கு உங்கள் அப்பாவை விடுதலை செய்வேன் என்று அந்தப் பச்சிளம் பாலகர்களி டம் ஜனாதிபதி உறுதியளித்தார்.

ஆனால் இன்றுவரை ஆனந்தசுதாகர னுக் குப் பொது மன்னிப்புக் கிடைக்கவில்லை இது ஏன் என்பதுதான் புரியவில்லை

ஞானசார தேரருக்குக் காட்டிய கருணையை; தாயை இழந்து நிற்கும் அந்தத் தமிழ்க் குழந் தைகளுக்குக் காட்டாதது ஏன்? அவர் சிங்களவர். இவர்கள் தமிழ்க்குழந்தைகள் இதுதான் மன்னிப்பின் வேறுபாடா?

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.