பிரெமந் நகரில் மனித உரிமைகள் அமைப்பினரால் தமிழினப்படுகொலை நினைவேந்தல்!!📷

தமிழினப்படுகொலை நினைவேந்தல் நேற்று மாலை Bremen நகரில் மனித உரிமைகள் அமைப்பினரால் நடாத்தப்பட்டது. மாலை 18.00 மணியளவில் அருட்தந்தை Hans - Gehard அவர்கள் நிகழ்வை ஆரம்பித்துவைத்தார். தேசியக்கொடி ஏற்றப்பட்டு, அதன்பின்பு இனப்படுகொலையில் உயிரிழந்த மக்களுக்காக  மலர்தூவி வணக்கம் செலுத்தப்பட்டது.


முதலில் தமிழின அழிப்புப்பற்றிய தனது ஆழ்ந்த  கவலையையும் கோபத்தையும் ஈக்குவடோர் நாட்டிலிருந்து  வருகைதந்திருந்த  Nidia Arabao Rodas அம்மையார் தனது மொழியில் நிகழ்த்த பேராசிரியர் Andy Higgingbottom அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

"நான் கண்ட ஏழு கனவுகள்" என்ற சிங்கள மொழியிலான கவிதையை சிங்கள இனக்கவிஞர் அஜித் ஹேரத் வாசிக்க, யேர்மனிய இளையவரொருவர் அதை யேர்மனிய மொழியிலுரைத்தார்.

பேராசிரியர் யூட் லால் அவர்களது விவரணக்காணொளியான "ஒக்கினவா" பற்றிய தகவலும் அங்கே குடியிருந்தபடி தமிழீழ இனவழிப்புக்குத் துணைநின்ற அமெரிக்கப்படைகள் பற்றிய தகவலும் வெளியிடப்பட்டது.

ஊடகவியலாளர் பாசண அபயவர்தன அவர்களது தயாரிப்பில் "தமிழீழ நடைமுறை அரசு" என்ற காணொளி வெளியிடப்பட்டது. அங்கே வந்திருந்த வேற்றின மக்கள் அதுதொடர்பாக வினவிய கேள்விகளுக்கு பாசண பதிலளித்தார்.

தொடர்ந்து ருவாண்டாவிலிருந்து வருகைதந்த Esther mujavayo அவர்கள் உரையாற்றினார், தமிழீழத்தின் நடைமுறை அரசு திட்டமிட்டு அழிக்கப்பட்டிருப்பதாக எனதுநாட்டிலுள்ள இளையோருக்கு அறிவுறுத்துவேன் எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து மியன்மாரிலிருந்து ரோஹிங்யா இனத்தைச் சேர்ந்த பேராசிரியர் Halikal Mansoor காணொளி ஊடாக உரையாற்றினார், எமது நிலம் பறிக்கப்பட்டுக்கொண்டிருப்பதிலே ஈழத்தின் வலியைத் தமது மக்கள் உணர்வதாகத் தெரிவித்தார்.

பிறேசில் நாட்டைச் சேர்ந்த San paulo பல்கலைக்கழக விரிவுரையாளரான Raul Arajao அவர்கள் ஈழத்திலுள்ள சிறுவர்களின் எதிர்காலம் பற்றிய கவலை தமக்குண்டென கவலை தெரிவித்தார்.

இறுதியில் தென் கொரியாவிலிருந்து அருட்தந்தை  பேராசிரியர் Don jin kim அவர்கள் ஈழவிடுதலைக்காக இறைவனிடம் வேண்டிப் பிரார்த்தனை செய்யும் காணொளி தேவாலயத்திலிருந்து நேரலையில் வெளியிடப்பட்டது.

நிகழ்வுகள் இரண்டாம் நாளாக இன்றும் தொடர்கின்றன.


Powered by Blogger.