புதைகுழியான மனச்சாட்சிகள்.!

மன்னார் தொடங்கி
நந்திக்கடல்வரை
போரின் தடயங்கள்
துடைத்தழிக்கப்பட்ட
பாதங்களுக்குக் கீழே
ஆக்கிரமிப்புக் காரரால்
கதறக் கதறக் கொல்லப்பட்ட
பெண்களின் முணகல்
நிறைந்திருக்கு.

குண்டு துளைத்த அங்கங்களுடன்
வானம் பார்த்து
இறுதி மூச்சை இழந்தோர்
துயரைச் சுமந்த வலி இருக்கு.

இரங்கல் அழுகை இல்லாமல்
இறுதி மரியாதை இல்லாமல்
அவலத்தோடு இறந்தவர்
ஊதிப்பிளந்து வெடித்து உக்கி
மண்ணோடு மண்ணாகிப்போன
அவலத்தை கொண்டிருக்கு.

குண்டு துளைத்தும்
குருதி பீறிடவும் குழந்தைகளும்
பெரியோரும் கொடிய
நஞ்சு வாயுவால்
கொன்று குவிக்கப்பட்ட
வரலாறு நிறைந்திருக்கு.

மூடிவிட்ட கல்லறையாய்
மூடாத பதுங்குகுழிகள்.
கொத்துக் குண்டும்
பொஸ்பரஸ் குண்டும்
ஏவி விட்ட உயிர்க்கொல்லிகள்.
எழுந்தோட வழியற்று அங்கவீனமாகி
கைவிடப் பட்டு கடைசி நிமிடம் வரை
கலங்கிக் கலங்கி உயிர் பிரிந்த
இதயத்தின்  வலி கலந்த
நினைவுகள் நிறைந்த பூமி இது.

ஆழ்கிணறாய் கிபீர் துளைத்த குண்டில்
அங்கங்கங்கள் பொசுங்கி சிதைந்து
ஆழ மண்ணில்புதைந்த
ஆயிரமாயிரம் ஆத்மாக்கள்
கதறிப்புதைந்த கதை கொண்ட பூமி இது.

பட்டினியால் வலிந்து வலிந்து
வதைபட்டு இறந்தவரும்
ஓடி ஓடிக் களைத்து
ஒருநிமிட உறக்கத்தில்
உயிரை விட்டவரும்
இந்தப்பூமியில் தான்
இருந்து மடிந்தார்கள்.

கஞ்சிக்கு காத்திருந்த பிள்ளைகளை
வஞ்சித்து உயிர்குடித்தன எறிகணைகள்.
தாயை இழந்தும்
கதறத்தெரியாத குழந்தை
மார்பு இரத்தத்தை
உண்ட வதைகொண்ட
வரலாறு கொண்டது இந்தப்பூமி.

வெள்ளைக்கொடி ஏந்தியோரையும்
வேள்விக்கு பலியிட்டு
வஞ்சம் தீர்த்த வரலாற்றைப்பதிந்த
வதை கொண்ட எம் வரலாறு.

தாயை இழந்தவரை
தந்தையை இழந்தவரை
குழந்தையை இழந்தவரை
உறவுகளை இழந்தவரை என
இழந்தோர் வதை நிரப்பியது இந்தப்பூமி.

இன்று,
போர்த்தடம் அற்ற வெட்டை வெளியும்
கட்டிட அலங்கரிப்பும்
தெருக்களின் வசதியும்
வளர்ச்சி என கண் ஒளிரும் காட்சிகளும்
போர் அவலப் படங்களைக்கூட
புனைகதை என சாற்றி நிற்கும்
பெரும் துயரைச்சுமந்த
வலி கொண்டதானது எங்கள் வரலாறு.

ஒட்டுமொத்தமாய் அழிந்தது
உயிர்கள் மட்டுமல்ல.
உலகம் நிறைந்த
ஒட்டு மொத்த மனச்சாட்சியும்
ஒரு இனக்குழுமத்தை
வஞ்சகமாய் அழித்ததுக்கு
உடந்தையான இழிவும்
புதைகுழி போல புதைத்ததும்தான்.

வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா
Latha Kanthaija
2019/05/17





கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.