பிரான்சு பரிசின் புறநகர்ப் பகுதியான சவினிலுத்தொம் நகரத்தில் இடம்பெற்ற கவனயீர்ப்பு நிகழ்வு!!

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் வலிசுமந்த 10 ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு இன அழிப்புக்கு நீதி கோரிய கவனயீர்ப்பும் போராட்டமும் பிரான்சு பரிசின் புறநகர்ப் பகுதியான சவினிலுத்தொம் நகரத்தின் தொடருந்து நிலைய முன்றிலில்  (15.05.2019) புதன்கிழமை பிற்பகல் 15.00 மணிக்கு இடம்பெற்றது.
பிரான்சு தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் பிராங்கோ சவினிலுத்தொம் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் செயற்பாட்டாளர் கஜன் அவர்களின் முயற்சியினால் தமிழினப்படுகொலையின் சாட்சியங்கள் அடங்கிய புகைப்படங்கள் பிரமாண்டமாகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.


இந்நிகழ்வில் சவினி லுத்தொம் மாநகரசபையின துணைநகரபிதா திருவாட்டி இசெபெல் தெலகோற் அவர்கள் கலந்துகொண்டு தமது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தார். அவர் எமது போராட்டத்தின் நியாயத்தன்மையை தாம் உணர்வதாகவும், எமது வலியை அவதானித்துள்ளதாகவும் எமக்கு தான் ஆதரவாக இருப்பதாகவும் தெரிவித்திருந்ததுடன், கலந்துகொண்ட அனைவருக்கும் கைலாகுகொடுத்து தனது ஆதரவைப் பகிர்ந்துகொண்டார்.


இவர்களுடன், பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப்பொறுப்பாளர் திரு.மேத்தா, பிராங்கோ சவினிலுத்தொம் தமிழ்ச்சங்கத்தலைவர் திரு. கஜேந்தின், சவினிலுத்தொம் தமிழ்ச்சங்க விளையாட்டுத்துறைப்பொறுப்பாளர் திரு.கலையழகன் மற்றும் செயற்பாட்டாளர்கள், சவினிலுத்தொம் தமிழ்ச்சோலை ஆசிரியர்கள், மாணவர்கள், மக்கள் அயல் கிராமமான லியுசன் கிராம மக்கள் எனப் பலரும் கடும் வெய்யிலுக்கு மத்தியில் கலந்துகொண்டு தமது உணர்வைவெளிப்படுத்தியிருந்தனர்.


சிறுவர்கள் கூட முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் புகைப்படப் பதாகைகளை கைகளில் ஏந்திநின்று ஆர்ப்பரித்தமை வெளிநாட்டவர்களையும் திரும்பிப்பார்க்கவைத்தது. வெளிநாட்டவர்களுக்கான பிரெஞ்சுமொழித் துண்டுப்பிரசுரங்களை சிறுவர்களே ஓடி ஓடி வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது. எமது போராட்டத்தின் நோக்கம் அடங்கிய மனுவும் தமிழ்ச்சங்கத் தலைவரால் துணைநகரபிதாவிடம் கையளிக்கப்பட்டது.


நிறைவாக பரப்புரைப்பொறுப்பாளர் திரு.மேத்தா அவர்கள் தெரிவிக்கையில், எமது இனம் பண்பாடு கலாச்சாரம் இன்னொரு நாட்டவர்களால், இன்னொருமதத்தவர்களால் அழிக்கப்பட்;டது. அந்த இன அழிப்புக்கு எதிராகப் போராடி மாண்போடும் வீரத்தோடும் மண்ணிலே சாய்ந்து எமது பேரையும்; புகழையும் பறைசாற்றி நிற்கும் ஓர் உன்னதமான இனம் எமது தமிழ் இனம். இந்த இனம் கொத்துக்கொத்தாக அழிக்கப்பட்டது. நாம் ஒன்றையும் மறந்துவிடவில்லை நெஞ்சுக்குள்ளே அழுதுகொண்டிருக்கின்றோம். எமக்கான நீதியை சர்வதேசத்தின் முன்வைத்து தொடர்ச்சியாகப் போராடிக்கொண்டிருக்கின்றோம் எனத்தெரிவித்த அவர், வரும் மே 18 சனிக்கிழமை அனைவரும் வருகைதந்து எமது ஒருமித்த குரலை வெளிப்படுத்தவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் கவனயீர்ப்பு நிகழ்வு நிறைவடைந்தது. (பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo
No comments

Powered by Blogger.