விடுதலைப்புலிகள் மீதான விமல் வீரவன்சாவின் அவதூறு-இதயச்சந்திரன்!!

'திருக்கோணமலைத் துறைமுகத்தை அமெரிக்காவிற்குத் தாரை வார்க்க விடுதலைப்புலிகள் விரும்பினார்கள். அதனை மகிந்த ராஜபக்ச முறியடித்தார்.' என்று புதுக்கதை ஒன்றினை அவிழ்த்துவிட்டுள்ளார் விமல் வீரவன்ச.

தேசிய வளங்களை அந்நியருக்கும் வழங்கும் சிங்களத்தின் அண்மைக்கால வரலாற்றினை வீரவன்ச மறந்துவிட்டாரோ...

அம்பாந்தோட்டை துறைமுகத்தினை 99 வருட குத்தகையில் சீனாவிற்கு கொடுத்த அந்த புண்ணியவான் யார்?.

ஸ்ரீலங்கா கெட்வெய் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் ஊடாக திருக்கோணமலைத் துறைமுகத்தையும் அதனைச் சுற்றியுள்ள நிலப்பரப்பில் கனரக தொழிற்பேட்டையை அமைப்பதற்கும் ஒப்பந்தம் ஒன்றினைக் கைச்சாத்திட முன்னின்றவர்கள் யார்?.

தமிழீழ இறைமையின் மீதுள்ள விடுதலைப்புலிகளின் பற்றுறுதியை தமிழ் மக்கள் நன்கறிவர்.

பேரினவாதத்  தலைமைகள் இலங்கையின்  வளங்களை வல்லரசுகளுக்கு விற்று, தம்மை வளப்படுத்திய  வரலாறும் நமக்குத் தெரியும்.

'திருக்கோணமாலைத் துறைமுகத்தினை அமெரிக்கா கையகப்படுத்தப்போகிறது ' என்கிற செய்தியை, 80 களின் முற்பகுதியில் ஈழப்போராட்ட அமைப்புகளுக்கு இந்தியா எச்சரித்த விவகாரம் வீரவன்சாவிற்குத் தெரிந்திருக்கும்.

அதன் உண்மைத்தன்மையையும், அதனைக் கூறும் இந்தியாவின் நோக்கத்தையும் விடுதலைப்புலிகள் புரிந்து வைத்திருந்தார்கள்.

இப்போது விமல் வீரவன்சாவின் பிரச்சினை என்ன?.

 மந்திரிப் பதவி ஒன்றினைப் பெற அவருக்கு ஆட்சிமாற்றம் தேவைப்படுகிறது.

மகிந்தர்தான் உண்மையான 'சிங்கள தேசியவாதி' என்று சித்தரிக்க, விடுதலைப்புலிகளை மலினப்படுத்தி அவர்கள் ஏகாதிபத்தியங்களின் கையாட்கள் என்று ஒப்பீடு செய்ய வேண்டிய அரசியல் கையறுநிலைக்கு அவர் வந்துள்ளார் என்கிற முடிவிற்கு வரலாம்.

1997 இல் புலிகள் மீது கொண்டு வந்த தடையை அமெரிக்கா இன்னமும் நீக்கவில்லை.

யப்பானின் முதன்மை இராஜதந்திரி யசூசி அகாசி, தேசியத்தலைவரை வன்னிக்குச் சென்று ஏன் சந்தித்தார்? என்கிற விடையம் விமலுக்குத் தெரியும்.

எமது தேசிய வளங்களை கொண்டு சென்ற கப்பலுக்கு புல்மோட்டைக் கடற்பரப்பில் என்ன நடந்தது?.

 யார் ஏகாதிபத்தியங்களின் அடிவருடிகள் என்பதை விமல் வீரவன்ச திரிபுபடுத்தலாம்.
ஆனால் வரலாறு சொல்லிக்கொண்டேயிருக்கும்.

இப்போது அமெரிக்காவுடன் 24 பக்க ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ள திலக் மாரப்பன என்பவர் புலியா?.

அந்நியப்படைகளை இலங்கைக்குள் கொண்டு வந்த இதே பௌத்த சிங்களப் பேரினவாதந்தான், துறைமுகங்களையும் மண்ணையும் கார்பொரேட்களுக்கும் ஏகாதிபத்தியங்களுக்கும் தாரை வார்க்கிறது.

விடுதலைப் புலிகள் எந்த நிலையிலும் எவருடனும் இவ்வாறான உடன்பாடுகளில் ஈடுபடவில்லை.

ஆதாரம் இருந்தால் நிரூபியுங்கள்.
எதிர்கொள்ளத் தயார்.
அவதூறுகள் யாவும் கருத்துருவமாகாது.
Powered by Blogger.