தேர்தல் கருத்துக் கணிப்புகள் நம்பகத்தன்மையை இழந்து விட்டன-கருணாஸ்!

தேர்தல் கருத்துக்கணிப்புகள் மக்கள் மத்தியில் நம்பகத்தன்மையை இழந்து விட்டன என்று முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவரும், நடிகருமான கருணாஸ் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை அவர் கூறியது: மதுரை பாண்டிகோவில் பகுதியில் நாடக நடிகர்கள் சங்கத்துக்கு புதிய கட்டடம் கட்டப்பட உள்ளது. அதற்கு எனது பங்காக ரூ.1 லட்சம் நிதியை வழங்குவதற்காக வந்துள்ளேன். கட்டடத்துக்கு கூடுதல் நிதி தேவைப்படுகிறது.
இதற்காக திரைப்பட நடிகர்களை கலந்து ஆலோசித்து கூடுதல் நிதி பெற்றுத் தருவதற்கு முயற்சி எடுப்பேன். 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் நான் திருவாடானை தொகுதியில் போட்டியிட்டபோது, கருத்துக் கணிப்புகள் அனைத்திலும் நான் வெற்றி பெற மாட்டேன் என்று தான் தெரிவிக்கப்பட்டன.

ஆனாலும் நான் வெற்றி பெற்றேன்.
எனவே கருத்துக் கணிப்புகளில் உண்மை இல்லை. பொய் கணிப்புதான் இருக்கிறது. இதனால், மக்கள் மத்தியில் கருத்து கணிப்புகளுக்கான நம்பகத்தன்மை குறைந்து விட்டது. அதிமுகவைச் சேர்ந்த 3 எம்எல்ஏக்களுக்கு, சட்டப்பேரவைத் தலைவர் நோட்டீஸ் அனுப்பியதில் நம்பகத் தன்மை இல்லாததால்தான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தேர்தலில் மக்கள் தங்களுக்கு பிடித்த ஒரு நல்ல அணியை தேர்ந்தெடுப்பார்கள். அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்திருப்பது மற்றவர்களுக்கு சாதகமாக உள்ளது. சிறையில் இருக்கும் சசிகலா வெளியே வந்தால்தான் அவரது நிலைப்பாடு என்னவென்று தெரியும்.
மத்திய பாஜக ஆட்சியில் பிரதமர் நரேந்திர மோடி அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. நாடு முழுவதும் உள்ள மக்கள் அமைதியாக சகோதரத்துவத்துடன் வாழ்வதற்கு ஏதுவான வகையில் நிலையான அரசு அமைய வேண்டும். மதுரையில் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் கலை நிகழ்ச்சி நடத்தி அந்த நிதியை நாடக நடிகர் சங்கக் கட்டட நிதியாக வழங்க வேண்டும் என்றார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.