3,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல் திட்டைகள் கண்டெடுப்பு!!

புதுக்கோட்டை அருகே மலைடிப்பட்டி கிராமத்தில் மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஏழு கல் திட்டைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டம், செவலூர் ஊராட்சி, மலையடிப்பட்டி கிராமத்தில் உள்ள காட்டுப்பகுதியில் கல்வட்ட அமைப்புக்குள்பட்ட வித்தியாசமான முறையில், கொம்படி ஆலயம் ஒன்று அமைந்திருப்பதாக அதே ஊரைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் அளித்த தகவலைத் தொடர்ந்து புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் நிறுவனர் மங்கனூர் மணிகண்டன், உறுப்பினர்கள் இயற்கை ஆர்வலர் மணிகண்டன், ஆசிரியர் சோலச்சி திருப்பதி உள்ளிட்ட குழுவினர் அண்மையில் கள ஆய்வு மேற்கொண்டனர். 
அப்போது அங்கு சுமார் பத்து ஏக்கர் பரப்பளவில் 7 கல் வட்டங்கள் அடையாளம் காணப்பட்டன.

இதில் 2 கல்வட்டங்கள் மட்டும் வழிபாட்டில் உள்ளன. இதுகுறித்து தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனர் மங்கனூர் மணிகண்டன் கூறியது:
மலையடிப்பட்டி நெடுமலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் மேலச்சுங்காடு மொக்காண்டி கொம்படி ஆலயம் பெருங்கற்கால நினைவுச் சின்னமான கல்வட்டத்தின் மையத்தில் அமைக்கப்பட்டு வழிபாட்டில் உள்ளது. 
கோயிலின் முக்கிய வழிபாட்டுப் பகுதியில் இருந்த கல்வட்டம் மற்றும் கல்திட்டை முழுமையாக அகற்றப்பட்டு, அதில் இருந்த கற்பலகைகள் கோயிலுக்கு நேர் எதிர்புறத்தில் கிடத்தப்பட்டு பலி பீடமாகப் பயன்படுத்தப்படுகின்றன. அதன் அருகில் இருக்கும் 2 கல் வட்டங்கள் முழுமையாக சிதைக்கப்படாமல் கல்லறை போன்ற அமைப்புகளுடன் உள்ளது. 
இதன் மையப்பகுதியில் மரங்கள் மற்றும் கொடிகள் மிகுந்து அடர்த்தியாகக் காணப்படுகிறது. இத்தகைய வழிபாட்டு முறை கோயில் கட்டுமான அமைப்புகளுக்கும் உருவ வழிபாட்டுக்கும் முந்தையது என மூத்த ஆய்வாளர்கள் கருதுகின்றனர். பெரும்பாலும் வட மாவட்டங்களைப் போல தென்மாவட்டங்களில் பெருங்கற்கால சின்னங்கள் வழிபாட்டில் காணப்படுவதில்லை. 
ஆனால் கொம்படி வேல் வழிபாடும், சுடுமண் சிற்ப வழிபாடும் மிகுதியாக உள்ளன. நெடுங்கல் வழிபாடு, கல் திட்டை வழிபாடு உள்ளிட்ட வழிபாட்டு முறைகள் பெரும்பாலும் அற்றுப்போய் கோயில் கட்டுமானங்களாக மாறி விட்ட நிலையில் இக்கோயிலில் மட்டும் கல் வட்டம், கல் திட்டை வழிபாட்டில் உள்ள நிகழ்காலச் சான்றாக உள்ளது.
ஏழு கல்வட்டங்கள் முழுமையாகவும், பகுதியளவு சிதைந்த நிலையில் கல்வட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலான கல்வட்டங்களில் இரும்புத் தாது கற்களான லேட்டரைட் எனப்படும் செம்புராங்கற்கள் கொண்டு வட்ட வடிவில் அடுக்கப்பட்டு உள்ளன. கல்வட்டத்தின் மையத்தை விட்டு சற்று விலகலாக கிழக்குப்புற விளிம்புப் பகுதியில் கருங்கல்லினாலான நான்கு பலகைக் கற்களை இணைத்து சதுர வடிவிலான கல்லறை அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. 
ஒரு சில இடங்களில் செம்புராங்கற்களுக்கு பதிலாக கல் வட்டங்களை அமைக்க இப்பகுதியில் எளிதாக கிடைக்கும் கருங்கல் பலகைக் கற்களைப் பயன்படுத்தியுள்ளனர். மொக்காண்டி என்பவர் இப்பகுதி மக்களின் மூதாதையராக இருக்க வாய்ப்பு உள்ளது. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இந்தக் கல் திட்டையைக் கணக்கிடலாம்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் அம்மாசத்திரம், ஆரணிப்பட்டி, ராஜகுளத்தூர், செங்களூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கல்வட்டத்துடன் கூடிய கல்லறைகள், கல் பதுக்கைகள், கல் திட்டைகள் அடையாளம் காணப்பட்டு இந்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன என்றார் மணிகண்டன்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

No comments

Powered by Blogger.