அடங்க மறுப்போம்!

நாம் கேட்க வேண்டியது மாணவர்களை விடுதலை செய்யும்படி அல்ல. மாறாக, பிரபாகரன் படம் வைத்திருந்தால் என்ன தவறு என்றே கேட்க வேண்டும்.

நாம் அடங்கி இருந்து கெஞ்சிக் கொண்டிருந்தால் அவர்கள் பிரபாகரன் படம் வைத்திருந்தாக கைது செய்வார்கள். பிரபாகரன் படத்திற்கு லைக் போட்டதாக கைது செய்வார்கள். இப்படி ஏதாவது ஒரு காரணம் சொல்லி கைது செய்து கொண்டே இருப்பார்கள்.

ஒருமுறை அடங்க மறுத்து, “பிரபாகரன் படத்தை வைத்திருந்தால் என்ன தவறு?” என்று கேட்டுப் பார். அதிசயம் நிகழும்.

ரோகன விஜயவீரா படம் வைத்திருக்கலாம். அவருக்கு நினைவு அஞ்சலி செய்யலாம். ஆனால் பிரபாகரன் படம் வைத்திருக்க கூடாது. அஞ்சலி செய்யக்கூடாது. இது என்ன நியாயம்?

இதைத்தான் குட்டக் குட்ட குனிபவனும் மடையன். குனிய குனிய குட்டுபவனும் மடையன் என்பது.

அவன் தேவை என்றால் மடையனாக இருந்தவிட்டுப் போகட்டும். ஆனால் எம்மால் இனி மடையனாக இருக்க முடியாது.

ஜேவிபி யை தடை செய்யவில்லை. எனவே ரோகன விஜயவீராவை கொண்டாடலாம். ஆனால் புலிகள் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே பிரபாகரனை கொண்டாட முடியாது என்று நம் மத்தியில் உள்ள சில நாய்க்குட்டிகள் அரசுக்காக வாலாட்டுகின்றன.

இந்தியாவிலும் புலிகள் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அங்கு பிரபாகரன் படம் வைத்திருப்பது குற்றம் இல்லை. ஜரோப்பிய நாடுகளிலும் புலிகள் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அங்கும் பிரபாகரன் படம் வைத்திருப்பது குற்றம் இல்லை.

இது பற்றி கேட்டால் அரசு வீசி எறியும் இறைச்சித்துண்டிற்கு வாலாட்டும் இந்த நாய்க்குட்டிகள் வாய் திறப்பதில்லை.

இலங்கையிலும்கூட மாணவர்களை கைது செய்யப்பட்டிருக்கும் பயங்கரவாத சட்டப்பிரிவில்  பிரபாகரன் படம் வைத்திருப்பது குற்றம் என்று கூறப்படவில்லை.

அப்படி குற்றம் என்றால் முதலில் கைது செய்யப்பட வேண்டியவர் முன்னாள் ராணுவ தளபதி கமால் குணரட்னவே. ஏனெனில் அவர் தனது  புத்தகத்தில் பிரபாகரன் படத்தை பிரசுரித்துள்ளார்.

அதுமட்டுமல்ல சம்பந்தர் அய்யா உட்பட பல தமிழ் அரசியல் தலைவர்கள் தேர்தல் காலங்களில் புலித் தளபதிகளின் படத்திற்கு அஞ்சலி செய்வது, புலிப் பாடல்களை தமது தேர்தல் கூட்டங்களில் பயன்படுத்துவது என செய்து வருகிறார்கள்.

ஆனால் அவர்கள் எவரையும் கைது செய்யாத இலங்கை அரசு மாணவர்களை கைது செய்தது மட்டுமல்ல அவர்களை பிணையில் விடவும் மறுத்து வருகிறது.

இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த அவசரகாலச் சட்டத்தை பாராளுமன்றத்தில் ஆதரித்த சுமந்திரன் அந்த சட்டத்தின் கீழ் கைது செய்த மாணவர்களை விடுவிக்க குரல் கொடுக்கிறாராம்.

அதில் கொடுமை என்னவென்றால் இந்த அரசு தம்மால்தான் காப்பாற்றப்பட்டதாக பெருமை அடிக்கும் சுமந்திரன் அந்த அரசால் கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்க முடியாமல் இருக்கிறாராம்.

அவர் இன்னும் எத்தனை சுத்துமாத்துகளை தமிழ் மக்களுக்கு காட்டப்போகிறாரோ தெரியவில்லை.

ஆனால் ஒன்று மட்டும் உண்மை. நாம் தொடர்ந்து அடங்கிப் போனால் இதுமாதிரித்தான் தொடர்ந்து எமக்கு நிகழப் போகிறது.

எனவே அடிமையாக வீழ்ந்து கிடப்பதைவிட எழுந்து நின்று மடிவது மேல்.

ஒரு முறை எழுந்து பார் தமிழா!

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.