தமிழர்களுக்கான ஜனநாயக போராட்டங்களை முடக்கவே பல்கலை மாணவர்களின் கைது சிவசக்தி!

தமிழர்களுக்கான ஜனநாயக போராட்டங்களை முடக்கவே பல்கலை மாணவர்களின் கைது சிவசக்தி ஆனந்தன் எம்.பி கடும் கண்டனம்தமிழர்களுக்கான ஜனநாயக போராட்டங்களையும், நிகழ்வுகளையும் முன்னெடுக்காது அவர்களின் பங்குபற்றலை குறைப்பதை பின்னணியாகக் கொண்டே யாழ். பல்கலைக்கழக மாணவர்களது கைது இடம்பெற்றுள்ளதாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் எம். திவாகரன், செயலாளர் எஸ். கபில்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 16ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமைக்கு கண்டனம் தெரிவித்து விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
வடக்கில் ஐவருக்கு ஒருவர் என்ற வகையில் படையினர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளார்கள். யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் கைது நடவடிக்கையைப் பார்க்கின்றபோது அற்பசொற்ப காரணங்களைக் காட்டி கைது செய்வதே படையினரின் நோக்கமாக இருக்கின்றது.

யாழ். பல்கலைக் கழகத்தின் இரு மாணவர்கள் விடுதலைப்புலிகளின் தலைவரின் புகைப்படம் பொறிக்கப்பட்ட பழுதடைந்த பதாதையொன்றை வைத்திருந்தமையை காரணம் காட்டி கைது செய்யப்பட்டுள்ளனர்.
அண்மைக்காலமாக பல்கலைக்கழக மாணவர்கள் தமிழினத்தின் உரிமைகளுக்காகவும் மற்றும் நீதிக்காகவும் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், காணி விடுவிப்பு போன்ற போராட்டத்தில் இதய சுத்தியுடன் பங்கேற்று வருகின்றார்கள்.

இவ்வாறு மாணவர்கள் இனம் சார்ந்து செயற்படுவதானது தமிழ் மக்களின் ஆணை பெற்றவர்கள் என்று மார் தட்டிக்கொண்டு, அடிப்படைக் கோட்பாடுகளை கைவிட்டு, கொள்கை விலகி, கம்பெரலியவுக்குள் கட்டுப்பட்டு நின்று கொண்டிருப்பவர்களுக்கும்,  ஆட்சியில் அமர்ந்து அரசியல் சுகபோகத்தினை அனுபவித்து வருபவர்களுக்கும் தலையிடியாக இருக்கின்றது.
திரைமறைவில் தன்னினத்திற்கு எதிரான திட்டமிடல்களை செய்துவிட்டு, கடந்த நான்கு வருடகாலமாக நல்லாட்சி அரசாங்கம் என்று சொல்லிக்கொள்ளும் அரசிற்கு உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் தமிழ் மக்களை அடகு வைத்தது மாத்திரமின்றி ஐ நாவில் கால நீடிப்பையும் நான்கு தடவை வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாகவும் வாக்களித்ததுடன் தெற்கின் அரசியல் குழப்பத்தில் நிபந்தனையின்றி அரசை காப்பற்றியவரகள்  அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், காணிவிடுவிப்பு தொடர்பில் கரிசனை கொண்டதாக இல்லை.

1979ம் ஆண்டுகளில் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு தமிழ் தலைமைகள் மௌனமாக இருந்ததன் விளைவு ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்படவும் படுகொலை செய்யப்படவும் காரணமாகவும் இருந்தார்கள். அதேபோன்று தற்போதைய அரசாங்கத்தினால் அமுல்படுத்த இருக்கும் புதிய பயங்கரவாத தடைச் சட்டத்திற்கும் மௌனமா இருந்து ஆதரவு அளித்து வருகின்றார்கள். இவ்விடயம் தமிழ் மக்களின் முதுகெலும்பாக இருக்ககூடிய யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் கைது வரையும் கொண்டு சென்றிருக்கின்றது.

தமிழ் மக்களால் பாராளுமன்றம் அனுப்பப்பட்டு  அரசுக்கு ஆதரவாக செயற்பட்டுவருபவர்கள் அரசின் தமிழர் விரோத நிலைப்பாடுகளுக்கு ஆதரவளித்து அதற்கு நியாயம் கற்பித்து மக்களை மீண்டும் மீண்டும் முட்டாளாக்கி தமக்கான பதவிகள் சுகபோகங்களை அரசிடமிருந்து பெற்றுக்கொண்டு கட்சி, தேர்தல், அரசியலை மட்டும் முன்னிறுத்தி வருவதானது தமிழர் தாயகத்தில் இவ்வாறான நிலைமைகள் ஏற்பட காரணமாக அமைகின்றது.

யுத்த காலத்தில் ஏற்பட்ட தமிழ் மக்களினுடைய உயிர் மற்றும் சொத்தழிவுகளை திட்டமிட்டு அரசு ஏற்படுத்திவிட்டு தற்போது கல்வியிலும் கைவைப்பதற்கும் வழிவகுத்து விட்டிருக்கின்றனர்.
இதுவரை பல்கலைக்கழகத்திற்குள் இராணுவத்தினரோ பொலிசாரோ கால்பதித்ததில்லை. போராட்ட காலத்தில்கூட அத்தகைய செயற்பாடுகள் இடம்பெற்றதில்லை. ஆனால் தற்போது இவ் துர்ப்பாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. பாதுகாப்புத் தரப்பினர் தமது கடமையைச் செய்வதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதியளித்திருந்தாலும் இராணுவம் மாணவர்களின் பாதுகாப்பையும் அவர்களது எதிர்காலத்திற்கு குந்தகம் ஏற்படாமலும்; செயற்பட்டிருக்க வேண்டும்.

வலுவான காரணம் இன்றி கைதுசெய்யப்பட்ட மாணவர் சங்கப் பிரதிநிதிகளை படைத்தரப்பின் பிடியிலிருந்து உரிய அரசியல் அழுத்தத்தைக் கொடுத்து விடுவித்திருக்க வேண்டிய மக்கள் பிரதிநிதிகள் சட்டரீதியாக அணுக முற்பட்டிருப்பதும் மாணவர்களை எதிர்வரும் 16ஆம் திகதி வரை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பதும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை குழப்புவதற்கான சதித்திட்டமாகவே பார்க்க முடிகிறது. அரசியல் உள்நோக்கத்துடன் இடம்பெற்றுள்ள கைது நடவடிக்கையை சட்டரீதியில் அணுகும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாடு எமக்கு பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.

அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் அவசரகால சட்டத்தினை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட கைதானது மிலேச்சத்தனமானதும், கண்டனத்திற்குரியதுமாகும். ஆகவே எந்தவித வழக்கு விசாரணைகளும் இன்றி அம்மாணவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். இத்தகைய கைதுகள் ஒருபோதும் நாட்டின் நல்லிணக்கத்திற்கோ சகவாழ்விற்கோ துணைபுரியாது என்பதை அனைவரும் உணர்ந்துகொள்வது அவசியம்.
அரசியல் உள்நோக்கங்களுக்காகக் கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களை நிபந்தனையின்றி விடுவிக்காவிடில் வடக்கு-கிழக்கு உட்பட நாட்டின் சகல பல்கலைக்கழக மாணவர்களும் பொது அமைப்புகளும்,சர்வமத தலைவர்களும்இஜனநாயக முற்போக்கு அரசியல் சக்திகளும் இணைந்து வெகுஜனப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். எனவே அரசாங்கம் உரிய நடவடிக்கையை மேற்கொண்டு அப்பாவி பல்கலைக்கழக தமிழ் மாணவர்களை தாமதமின்றி விடுதலை செய்யும் என்று எதிர்பார்க்கின்றோம் என தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.