துரோகி எடப்பாடி - எதிரி ஸ்டாலின்: தங்க தமிழ்ச்செல்வன்!!

மே 7ஆம் தேதியன்று தேனி மாவட்டம் கானாவிலக்கில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், “22 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் அமமுக வெற்றிபெறும். அதன் பின் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படும்போது திமுகவுடன் இணைந்து ஆட்சியை கவிழ்ப்போம்” என்று தெரிவித்திருந்தார்.



பின்னர் இதுதொடர்பாக பேசிய திமுக செய்தித்தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், “அதிமுகவுக்கு எதிராக எத்தனை கட்சிகள் வேண்டுமானாலும் இணையலாம். அமமுகவும் இணையலாம். அதிமுக ஆட்சிக்கு எதிரானவர்கள் என்றால் ஆட்சியை கலைப்பதற்கு திமுகவுடன் இணையலாம்” என்று தெரிவித்திருந்தார்.


இதுகுறித்து நேற்று தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “திமுகவும் அமமுகவும் உறவு வைத்திருக்கின்றனர். அதிமுகவை உடைத்து ஆட்சியைக் கவிழ்க்க அவர்கள் ஏற்கெனவே பேச்சுவார்த்தை நடத்தியது தங்க தமிழ்ச்செல்வன் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது” என்று தெரிவித்திருந்தார்.


இதைத்தொடர்ந்து மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, “தங்க தமிழ்ச்செல்வன் தினகரனுக்கு பக்கத்தில் இருந்துகொண்டு தினகரனுக்கு எதிரானவற்றை பேசிக்கொண்டு இருக்கிறார். தினகரனுடைய வளர்ச்சிக்கும், தினகரனுக்கும் ஆதரவாக அவர் பேசுவதில்லை. திமுகவில் விரைவில் இணையப்போவதாக தங்க தமிழ்ச்செல்வன் தனது பேட்டிகளில் மறைமுகமாக சொல்கிறார். செந்தில் பாலாஜிக்கு பிறகு தங்க தமிழ்ச்செல்வனும் திமுகவில் இணைய தயாராகிவிட்டார். அவருடைய பேட்டிகளிலிருந்தே அது தெளிவாகிறது” என்று தெரிவித்திருந்தார்.


இந்நிலையில், இன்று மதுரையில் தங்கத் தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அமைச்சராக இருப்பவர்கள் நான் கேட்கும் கேள்விக்கு சரியாக பதிலளிக்க வேண்டும். ஜானகி அணி, ஜெயலலிதா அணி என இரு அணிகள் இருந்தபோது ஏன் ஜானகி ஆட்சியை கலைத்தீர்கள்? ஜானகி ஆட்சியை திமுகவோடு சேர்ந்துகொண்டு கலைத்தீர்களா இல்லையா? ஏன் கலைத்தீர்கள்? அதற்கு பதிலளிக்காமல் மேதாவித்தனமாக பேசிக்கொண்டிருக்கிறார்கள்” என்று கூறினார்.


தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணையப்போவது உறுதியாகிவிட்டதாக முதல்வரும், அமைச்சர்களும் கூறுகிறார்களே என்று செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு அவர், “திமுகவில் இணைவது தொடர்பான பேச்சு தேர்தலுக்கு முன்பு வந்திருக்க வேண்டும்; அல்லது தேர்தலுக்கு பின் வந்திருக்க வேண்டும். தேர்தல் முடிவுகளே வரப்போகிறது. இப்போது எப்படி நான் திமுகவில் சேர முடியும்? முதலில் நான் கேட்ட கேள்விக்கு அமைச்சர்கள் அனைவரும் பதிலளிக்க வேண்டும்.

22 தொகுதிகளிலும் அமமுக வெற்றிபெறப் போகிறது. நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டு சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும். அப்போது அமமுகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அதிமுகவுக்கு எதிராகத்தான் வாக்களிப்பார்கள். திமுக, காங்கிரஸ், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் யாருக்கு வாக்களிப்பார்கள் என்பது தெரியாது. எங்களுடைய நிலைப்பாடு இதுதான். எங்களுக்கு எதிரி திமுக, துரோகி எடப்பாடி பழனிசாமி” என்று கூறினார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.