காரைநகர் பிரதேச சபை தவிசாளரையும் செயலாளரையும் நீதிமன்றில் ஆஜராக உத்தரவு!!

காரைநகர் பிரதேச சபை தவிசாளரையும் செயலாளரையும் நீதிமன்றில் ஆஜராக உத்தரவு பாரம்பரிய உணவகத்தை தனியாருக்கு வழங்கிய குற்றச்சாட்டு.


காரைநகர் பிரதேச சபைத் தவிசாளரையும் செயலாளரையும் ஊர்காவற்றுறை நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். காரைநகர் பாரம்பரிய உணவகத்தை தனியார் ஹொட்டல் ஒன்றுக்கு வழங்கிய குற்றச்சாட்டை விசாரிப்பதற்காகவே எதிர்வரும் ஜீன் 11 ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி மருத்துவர் ப.நந்தகுமார் நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கின் அடிப்படையிலேயே மேற்படி இருவரையும் விசாரணைக்கு மன்றில் ஆஜரமாகுமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

வடக்கு மாகாண சபையின் 11.43 மில்லியன் ரூபா நிதியில் பாரம்பரிய உணவம் அமைக்கப்பட்டது. இந்த உணவகத்தை வடக்கு மாகாணத்தின் அப்போதைய முதலமைச்சர் கடந்த வருடம் ஒக்ரோபர் மாதம் 24 ஆம் திகதி திறந்துவைத்தார்.

பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்குவதற்காகவும் காரைநகர் கசூரினா சுற்றுலா மையத்திற்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளுர் வாசிகளின் நலன் கருதியும் இந்த உணவகம் அமைக்கப்பட்டது.

இந்த உணவகம் கடந்த சில தினங்களாக யாழ்.நகரில் இயங்கும் கொஷி ரெஸ்ரோறன்ஸ் எனப்படும் ஹொட்டலின் பெயரில் இயங்கி வந்தது.

அங்கு சென்ற காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி சுகாதாரப் பரிசோதனையில் ஈடுபட்டபோது, முறையான சுகாதார விதிமுறைகள் பேணப்பட்டிருக்கவில்லை. முறையான அனுமதிகளும் பெறப்பட்டிருக்கவில்லை எனத் தெரியவருகின்றது.

குறித்த உணவகத்தை நடத்தி வந்தவர்கள், காரைநகர் பிரதேச சபையினரே இதைத் தமக்கு வழங்கினர் எனக் கூறினர்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்குவதற்காக அரச நிதியில் அமைக்கப்பட்ட இந்த உணவகத்தை தனியார் ஹொட்டல் ஒன்றுக்கு வழங்கியமை, அங்கு முறையான சுகாதார விதிமுறைகள் பேணப்படாமை போன்ற காரணங்களை முன்வைத்து காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி ஊர்காவற்றுறை நீதிமன்றில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கின் அடிப்படையில் காரைநகர் பிரதேச சபைத் தவிசாளர் மற்றும் செயலாளர் ஆகியோரை விசாரணை செய்வதற்காக மன்றில் ஆஜராகுமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.