மெல்லப் பேசு ....மின்னல் மலரே.... பாகம் 19!!சொல்கின்ற நேசங்கள்
அவனியிலே ஏராளம்
சொல்லாத காதலின் 
சொந்தம் நீயடி


தோட்டத்தில் நடந்துகொண்டிருந்தான் வெற்றி, அவனது தோளில் அனந்திதன். வெற்றியின் தலையை இறுகப்பற்றி, முடிமீதே தலை சாய்ந்திருந்தான் குழந்தை.

அனந்திதன் மீது வெற்றிக்கு இருந்த பாசம் இன்னும் அதிகமானது, வெற்றிக்கு சிந்தனை வேகமாய் ஓடியது. 'பிறந்ததும் பெற்றவர்களை இழந்திருக்கிறான், இவன் என்ன செய்தான், ஏன் இப்படி,' என ஓடிய எண்ணத்தை மாற்றியும் யோசித்தான்.

இவன் தன் பெற்றவர்களை இழந்ததினால்தான் கனிமொழி போன்ற ஒரு தாயிடம் வந்து சேர்ந்திருக்கிறான், இல்லாவிட்டால் அந்தப் பாக்கியம் இவனுக்கு கிடைக்காமலே போயிருக்கும். தோளில் இருந்த குழந்தையை இறக்கி முன்பக்கமாக துாக்கியவன், குழந்தையின் உச்சந்தலையில் அழுத்தமாய் தன் இதழ்களைப் பதித்தான். இறுக்கி அணைத்தபடி, மார்பிலே சாய்த்துக் கொண்டவன்  “அப்பா உன்னை நல்லா பாத்துக்கொள்ளுவன்டா, நீ கவலைப்படாதை, இந்த உலகத்தில யாருக்குமே கிடைக்காத அப்பா எனக்கு கிடைச்சிருக்கிறார் எண்டு நீ பெருமையா சொல்லிக்கொள்ளுற மாதிரி நான் உன்னை வளத்து ஆளாக்குவன் கண்ணா” என்றதும் எதுவும் புரியாமல் அவனையே பார்த்தான் குழந்தை.


மூக்கோடு மூக்கை உரசினான் வெற்றி, கிளுகிளுத்துச் சிரித்தான் குழந்தை. உயரத் துாக்கி தட்டாமாலையாகச் சுற்றினான். அனந்திதன் தலைமுடியை இறுகப் பற்றும் போதெல்லாம் வெற்றிக்கு வலிக்கு பதிலாக வார்த்தைகளில் சொல்லமுடியாத ஒரு இன்பமே ஊற்றெடுத்தது.

தந்தையாவது என்பது ஏன் இன்பமானது என்பது அவனுக்குப் புரிந்தது. ஒரு குழந்தையின் தொடுகை  அலாதி ஆனந்தமானது என  நினைத்தான்.

உலகத்தில் இதைவிட வேறென்ன சந்தோசம் தேவை, கனியின் சந்தோசத்திற்கெல்லாம் இவன் தான் காரணம், அதனால்தான், குழந்தைக்கும் தனக்குமான உலகத்தில் அவள் அபரிமிதமான அழகியாக ஜொலிக்கிறாள், பெற்றுவிடாத இவன் மீது அவளது தாய்மை பற்றிப்படர்ந்து கிடக்கிறது, அனந்துவின் மீது கனிமொழி கொண்டிருக்கும் நேசத்தைத்தான் அவன் பார்த்துக் கொண்டிருக்கிறானே, து ஒரு ஆத்மார்த்தமான அன்பென்பது அவனது எண்ணம், வெற்றிக்கு இன்னொன்றும் தோன்றியது, அவன் கனிமொழி மீது கொண்டிருப்பதும் இப்படிப்பட்டதொரு நேசம்தானே, அவனும் அவளைச் சுமந்துகொண்டுதானே இருக்கிறான் இதயத்தில்.....அப்படியென்றால் நானும் தாயாகி நிற்கிறேன் தானே, தனக்குத்தானே சொல்லிக்கொண்டவன், மெல்லப் புன்னகைத்து, அனந்திதனை  மீண்டும் இறுக்கமாய் கட்டி அணைத்துக் கொண்டான்.

உண்மையில் தாய்மை என்பது பிள்ளைகளைப் பெறுவதல்ல, அது உணர்வின் வடிவம் என்பது வெற்றிக்குப் புரிந்தது. இந்த வயதில் இப்படி ஒரு முடிவெடுத்து, அதைச்செயலாக்கி,  அவளது உயர்ந்த எண்ணங்கள் அவளது தனித்துவமே,  தனக்குத்தானே சொல்லிக்கொண்ட வெற்றி, “அனந்துமா, உங்க ரெண்டுபேரோட உலகத்தில என்னையும் சேர்த்துக்கொள்ளச் சொல்லுடா உங்க அம்மாவை, அவளையும் உன்னையும் என் ரெண்டு கண்களா நினைச்சு பாத்துக்கொள்ளுவன்டா, இந்த உலகத்தில எனக்கு மிகப்பெரிய சந்தோசம் எது எண்டு கேட்டால் நீயும் உன் அம்மாவும்தான்டா குட்டி, ” என்றான். அதற்கும் சிரித்துவைத்தான் குழந்தை.

“அனந்து குட்டி, நல்லா படிப்பானாம், நல்லா விளையாடுவானாம், அப்பாவைவிட ரொம்ப கெட்டிக்காரனாகி அம்மாவுக்கு நிறைய சந்தோசத்தைக் கொடுப்பானாம்,” என்றதும் சின்னக் குழந்தைக்கு என்ன புரியும்?

வெற்றியின் தோளை இறுகக்கட்டிக்கொண்ட குழந்தை, அந்த தோளிலேயே முகம் புதைத்துக்கொண்டது. 

“சரி வா, அப்பாவும் அனந்துவும் வெளியில  போயிட்டு வரலாம்” என்றபடி வீட்டை நோக்கி நடந்தான்.

தொடரும்.....

கோபிகை


ஆசிரியர்பீடம் 
தமிழருள் இணையத்தளம்

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Powered by Blogger.