இமயம் என உயர்ந்து நிற்கும் இந்திய அணியை வீழ்த்தி இன்று அதிசயம் நிகழ்த்துமா ஆப்கானிஸ்தான் ?!

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் இந்தியாவும், ஆப்கானிஸ்தானும் மோதி வருகின்றன. இந்தப் போட்டியை மலைக்கும், மடுவுக்கும் இடையேயான ஆட்டம் என சொன்னால் அது அதீத நம்பிக்கையென ஆகிவிடும். இருந்தாலும் அதுதான் யதார்த்தம். இத்தொடரில் தான் இதுவரை ஆடியுள்ள 4 ஆட்டங்களில் 3 -இல் வெற்றி, ஒரு போட்டி டிரா என தோல்வியையே காணாத இந்திய அணி. இதுவரை தான் விளையாடியுள்ள 5 போட்டிகளிலும் தோல்வி. அதுவும் கடைசியாக இங்கிலாந்து அணியுடனான ஆட்டத்தில் படுதோல்வி என, தொடர்ந்து மரண அடி வாங்கிவரும் ஆப்கானிஸ்தான். இப்படி, ஆட்டத்திறனில் இரு வேறு நிலைகளில் உள்ள அணிகள் சந்திக்கும் இப்போட்டியில், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 397 ரன்களை குவித்து, இங்கிலாந்து நிகழ்த்தியுள்ள சாதனையை இந்தியா இன்று முறியடிக்குமா? அல்லது இந்தியாவின் ரன் குவிக்கும் வேகத்தை கட்டுப்படுத்தி, சவாலான ஆட்டத்தை ஆப்கானிஸ்தான் வெளிப்படுத்துமா? என்பதுதான் தற்போது நம்முன் இருக்கும் ஒரே கேள்வி. மற்றபடி, இந்தியா வெற்றி பெறவே இன்று 99 சதவீதம் வாய்ப்புகள் உள்ளன. இந்தக் கணிப்பையும் மீறி, ஆப்கானிஸ்தானின் மும்மூர்த்திகளான சுழற்பந்து வீச்சாளர்கள் ரஷித் கான், முகமது நபி, முஸ்புர் ரஹ்மான் ஆகியோர் ஏதேனும் அதிசயங்களை நிகழ்த்தினால் மட்டுமே, ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவை வெல்ல முடியும். அப்படியொரு வெற்றியை ஆப்கானிஸ்தான் பெற்றால், அது உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் குறிப்பிடத்தக்க வெற்றியாக பேசப்படும். அதற்கு எந்தளவுக்கு வாய்ப்பு உள்ளதென தெரியவில்லை. பார்ப்போம்...

No comments

Powered by Blogger.