மந்தமான நடிகர் சங்கத் தேர்தல்!!

சென்னை மயிலாப்பூர் புனித எப்பாஸ் பள்ளியில் இன்று காலை முதல் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் தபால் வாக்குகள் சரியான வகையில் அனுப்பப்படாததாலும் கடைசி நேரத்தில் வெளியான தீர்ப்பாலும் மந்தமடைந்துள்ளது. நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும், பாக்கியராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றன. இவ்விரு அணிகள் சார்பிலும் மொத்தமாக 69 பேர் போட்டியிடுகின்றனர். மொத்தம் 3,644 பேர் உறுப்பினர்களாக இருக்கின்றனர். அவர்களுள் 3100 வாக்களிக்க தகுதியுள்ளவர்கள். இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று மாலை 5.30 மணியுடன் தபால் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில் ரஜினிகாந்த் அவர்களுக்கு தபால் வாக்குப்படிவம் நேற்று மாலை 6.45 மணிக்குத்தான் போய் சேர்ந்துள்ளது. அதனால் ரஜினி இந்த தேர்தலில் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தபால் வாக்கு கிடைக்காததால் பலரால் வாக்களிக்க முடியவில்லை என நாடக நடிகர்கள் கூறியுள்ளனர். அதனால் நடிகர் சங்கத் தேர்தல் வாக்குப்பதிவு மந்த நிலையில் உள்ளது. தற்போது வரை 946 பேர் வாக்களித்துள்ளனர். நடிகர்கள் விஜய், சூர்யா, சிவகுமார், கவுண்டமணி, செந்தில், விவேக், ஆர்யா, ஷாம், சாந்தனு, குஷ்பு, லதா, அம்பிகா, ராதா, சுஹாசினி உள்ளிட்டோர் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். காலை 11.30 மணிக்கு மேல் வாக்களிக்க வந்த விஜய்யை சூழ்ந்த பத்திரிக்கையாளர்கள், ரஜினிகாந்த் வாக்களிக்க இயலாததைப் பற்றிய அவரது கருத்துக்களை கேட்டனர். ஆனால் எப்போதும் போல விஜய் மென்மையாக சிரித்தபடியே பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார். தனது வாக்கை பதிவு செய்ய இன்று காலை நடிகர் மோகன் வந்தார். ஆனால் அவரது பெயரில் வாக்கு செலுத்தப்பட்டு விட்டது என அதிகாரிகள் தெரிவித்ததால் நடிகர் மைக் மோகன் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். சென்ற முறை நடந்த தேர்தலிலும் இதே போல நடந்துள்ளதால் பெயரில் குளறுபடி ஏற்பட்டிருக்கலாம் என நாசர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.