ஈழத் தமிழர்கள் வீரம் செறிந்த போராட்ட வரலாற்றின் சொந்தக்காரர்களா?

இன்னொரு 300 வருடங்களின் பின்னர், ஈழத் தமிழர்கள் இலங்கை அரசுக்கு எதிராக , இந்திய ராணுவத்திற்கு எதிராக வீரம் செறிந்த போராட்டத்தை நடத்தினார்கள் என்று கூறினால் யாரும் நம்பமாட்டார்கள்.
ஏனெனில் 300 வருடத்திற்கு முன்னர் ஈழத் தமிழர்கள் வீரம் செறிந்த போராட்டத்தை நடத்தினார்கள் என்று இப்போது கூறும்போது “என்ன பகிடி விடுகிறாயா?” எனக் கேட்கிறார்கள்.

போர்த்துக்கேயருக்கு எதிராக போராடினார்கள் என்று கூறினால் “ தமிழர் எங்கே போராடினார்கள்? ஒல்லாந்தர் அல்லவோ விரட்டினார்கள்” என்கிறார்கள்.

சரி, ஒல்லாந்தரை விரட்டினார்களே என்று கூறினால் உடனே அதற்கு “ ஆங்கிலேயர் அல்லவா ஒல்லாந்தரை விரட்டினார்கள்” என்கிறார்கள்.
ஓ! அப்படியா? அப்ப ஆங்கிலேயரை தமிழர் போராடி விரட்டினார்களே என்று சுட்டிக் காட்டினால் அதற்கு “ இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்கும்போது ஆங்கிலேயர் தாமாகவே இலங்கைக்கு சுதந்திரம் கொடுத்தார்கள்” என்று கூறுகிறார்கள்.

பார்ப்பணரான சிவராமகிருஸ்ணன் என்ற (பிபிசி) ஊடகவியலாளர் ஆதவன் வானொலிக்கு வழங்கிய செவ்வியில் “ ஆங்கிலேயர் இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கும்போது கொசுறாக இலங்கைக்கும் கொடுத்தார்கள்” என்று நக்லாக கூறினார்.

காட்டின் வரலாற்றை சிங்கம் எழுதினால் “மான் தானாக வந்து தன்னை சாப்பிடும்படி கேட்கிறது” என்றே எழுதும்.

அதேபோல் வெற்றி பெற்றவர்களே வரலாற்றை எழுதுவதால் ஈழத் தமிழர்களின் போராட்ட வரலாறு வெளியே தெரியவில்லை.
ஆனாலும் சில சரித்திர ஆய்வாளர்களால் உண்மைகள் வெளிக் கொணரப்படுகிறது. அதில் ஒருவராக நோர்வேயில் வசித்துவரும் சரவணன் என்பவர் அண்மையில் ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளார்.


அதில் அவர் இலங்கையில் போர்த்துக்கேய கேப்டனாக இருந்த ரிபைரோ என்பவர் எழுதிய நூலைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார். அவர் கூறுகிறார்
“போர்த்துக்கேயரின் பிடியில் இருந்த யாழ்ப்பாணத்தை மீட்க 1629 ஆம் ஆண்டு அத்தபத்து முதலியார் தலைமையிலான 5000 பேரைக் கொண்ட சிறப்புப்படையணி சமரிட்டு விடுவித்தது. பின்னர் போர்த்துக்கேயர் பத்தாயிரம் படையினருடன் சென்று யாழ்ப்பாணத்தை மீண்டும் கைப்பற்றி அத்தபத்துவின் தலையை வெட்டி யாழ்ப்பாணத்தில் ஊர்வலமாக எடுத்துச் சென்று காட்சிப்படுத்திய கதையை அறிந்திருப்போம். 13 நாட்களில் ஐயாயிரம் பேரை பலிகொடுத்த அந்தப் சமர் குறித்த ஆரம்பத் தகவல்கள் பல இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.


இலங்கையில் போர்த்துகேய ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்த அந்த சமர் அன்றைய “முள்ளிவாய்க்கால் சமர்” என்றே குறிப்பிடவேண்டும்”
ஈழத் தமிழர்கள் மட்டுமன்றி இலங்கை மக்கள் அனைவருமே வீரம் செறிந்த போராட்ட வரலாற்றின் சொந்தக்காரர்கள் என்பதை நிரூபிக்கும் ஆதாரங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

-பாலா-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.