இன்று திருகோணமலைக்கு விஜயம் செய்கிறார் ரணில்!!

திருகோணமலை மாவட்டத்திற்கு இன்று 27ஆம்திகதி வியாழக்கிழமை விஜயம் மேற்கொள்ளும் பிரதமர் ரணில் விக்கிரம சிங்க, தம்பலகாமம் சுகாதார வைத்திய நிலையத்திற்கு அடிக்கல் நாட்டி வைப்பதுடன், வீதித் திறப்பு மற்றும் இடம்பெயர்ந்த மக்களுக்கான குடியேற்ற வீடுகளைத் திறந்து வைத்தல், வீ ட்டு பயளானிகளுக்கான பத்திரங்கள் வழங்கல், ஆசிரிய நியமனம் வழங்கல் ஆகிய நிகழ்வுகளிலும் கலந்து கொள்கிறார்.


தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சினால் செயற்படுத்தப்படும் இவ் அபிவிருத்தித் திட்டங்களில், தம்பலகாமம் ஆரம்ப சுகாதார நிலையம் 75 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வுகள் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார தலைமையில் நடைபெறவுள்ளது.

இன்று காலை 11மணியளவில் தம்பலகாமம் சுகாதார நிலையத்திற்கு அடிக்கல் நாட்டப்படும். அடுத்து, வடக்கு கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு உள்நாட்டுக்குள் இடம்பெயர்ந்த மற்றும் இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்து நாடு திரும்பியவர்களுக்கான வீட்டுத்திட்டத்தின் முதல் கட்டத்தில் தம்பலகாமம் பொற்சோலை கிராம சேவையாளர் பிரிவில் அமைக்கப்பட்ட வீடுகள் திறந்து வைக்கப்படவுள்ளன. முதல் கட்டத்தில் தலா 10 லட்சம் பெறுமதியான 400 வீடுகள் திருகோணமலை மாவட்டத்தில் வழங்கப்பட்டிருந்தன.

அதேநேரம், 113 மில்லியன் செலவில் புனரமைக்கப்பட்ட சர்தாபுர - கன்னியா வீதி, 90 மில்லியன் செலவில் புனரமைக்கப்பட்ட கன்னியா இலுப்பைக்குளம் வீதி, மற்றும் 2 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட இலுப்பைக்குளம் ஏ.பி.சி வீதி ஆகியனவற்றையும் பிரதமர் ரணில் விக்கிரம சிங்க திறந்து வைக்கிறார்.

அதேநேரம், மாலை 2 மணிக்கு திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் நடைபெறும், வடக்கு கிழக்கு மாகாணங்களில் நீண்ட காலமாக தொண்டர் அடிப்படையில் கடமையாற்றிய ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வில் பிரதமர் பிரதம அதிதியாகக்கலந்து கொள்ளவுள்ளார்.

அத்துடன், வடக்கு கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு உள்நாட்டுக்குள் இடம்பெயர்ந்த மற்றும் இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்து நாடு திரும்பியவர்களுக்கான வீட்டுத்திட்டத்தின் 2ம் கட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 600 பயனாளிகளுக்கான பத்திரங்கள் வழங்கும் நிகழ்விலும் கலந்து கொள்கிறார். இந் நிகழ்வு, திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வுகளில் கிழக்கு மாகாண ஆளுனர், மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மத்திய மற்றும் மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், திட்டமிடல் பணிப்பார்கள், உதவித்திட்டமிடல் பணிப்பாளர்கள், மற்றும் அதிகாரிகள், உத்தியோகத்தர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.