திமுக அழுத்தம்: காங்கிரஸிலிருந்து கராத்தே நீக்கம்!

காங்கிரஸ் கட்சியிலிருந்து தென்சென்னை மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் இன்று (ஜூன் 27) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “காங்கிரஸ் கட்சியின் தென்சென்னை மாவட்டத் தலைவர் கராத்தே தியாகராஜன், தொடர்ச்சியாக கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்காலிகமாக கட்சியிலிருந்து நீக்கப்படுகிறார்” என்று தெரிவித்துள்ளார்.
ஜூன் 21ஆம் தேதி சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய கராத்தே தியாகராஜன், “நான் கூடதான் தலைவராகணும்னு ஆசைப்பட்டேன். செயல் தலைவர் ஆகலாம்னு கூட நினைச்சேன். ஆனா, அதுவும் முடியல. நான் ஒண்ணும் தவறா எடுத்துக்க மாட்டேன். ஆனா தொண்டர்களுக்கு என்ன பதில் சொல்றது? சில பேர் மட்டும் தொடர்ந்து பதவிக்கு வந்துக்கிட்டே இருக்கணும். தொண்டன் தொண்டனாகவே இருக்கணுமா?
உள்ளாட்சித் தேர்தல் வருது. ஒருலட்சத்து 20 ஆயிரம் பதவிகள் இருக்கு. போன வாட்டி உள்ளாட்சித் தேர்தல்ல சென்னையில இருக்குற 200 வட்டத்துல முதல்ல காங்கிரஸுக்கு திமுக 4 வட்டம்தான் கொடுத்தாங்க. அப்புறம் தலைவர் எல்லாம் போய் பேசி பத்து எக்ஸ்ட்ரா போட்டுக் கொடுத்தாங்க. இதுக்கே தொண்டர்கள்கிட்ட பதில் சொல்ல முடியலை.
சென்னையில 22 சட்டமன்றத் தொகுதி இருக்கு. தொகுதிக்கு ஒன்று கொடுத்தா கூட 22 வார்டு நமக்கு வரணும். அப்படி இல்லையா காங்கிரஸ் தனியா நின்னா கூட 35 வார்டுல ஜெயிக்குற அளவுக்கு இருக்கோம். கட்சியெல்லாம் கடந்து நமக்கு இருக்கிற லோக்கல் அட்ஜெஸ்மெண்ட் மூலமாகவே ஜெயிக்கலாம். அதனால வர்ற உள்ளாட்சித் தேர்தல்ல தொண்டர்களுக்கு பதவி வாங்கற வழியப் பாருங்க” என்று கூறியிருந்தார். 
இதற்கு எதிர்வினையாக மறுநாள் ஜூன் 22ஆம் தேதி திருச்சியில் நடந்த திமுக ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, காங்கிரஸுக்கு எத்தனை நாள் பல்லக்கு தூக்குவது? திமுக தனித்துப் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனையடுத்து திமுக-காங்கிரஸ் கூட்டணியில் புகைச்சல் உண்டானது. இதுதொடர்பாக உடனடியாக ஊடகங்களுக்கு பேட்டியளித்த கராத்தே தியாகராஜன், “திருச்சியில் போட்டியிட்ட திருநாவுக்கரசர் கூறிய சில கருத்துக்களுக்கு எதிராகத்தான் நேரு அவ்வாறு பேசியிருக்கிறார்” என்று கூறியிருந்தார்.
இதனையடுத்து அறிக்கை வெளியிட்ட கே.எஸ்.அழகிரி, கட்சிப் பிரச்சினைகளை ஊடகங்களில் வெளியிடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். கராத்தே தியாகராஜன் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளர் என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க யோசித்த அழகிரி, இதுகுறித்து சிதம்பரத்திடமே முறையிட்டுள்ளார். அப்போது அழகிரிக்கு பதில் சொன்ன சிதம்பரம், “இப்போது உங்களைப் பற்றி கூட புகார்கள் எனக்கு வருகின்றன” என்று பதில் கூறியிருக்கிறார். மேலும், கராத்தேவிடமும் இதுபற்றி சிதம்பரம் பேசிய நிலையில், உடனடியாக கராத்தே தியாகராஜன் ஜூன் 26ஆம் தேதி இந்த சர்ச்சை பற்றி, “மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தில் தனிப்பட்ட முறையில் சில கருத்துகளைத் தெரிவித்தேன். அது சில நாளிதழ்களில் வந்ததால் திமுக முன்னாள் அமைச்சர் அண்ணன் கே.என். நேரு சில கருத்துகளை கூறியிருந்தார். தொடர்ந்து அது அவரது தனிப்பட்ட கருத்து என்றும் கூறிவிட்டார். இது தொடர்பாக நான் கூறியதும் எனது தனிப்பட்ட கருத்தாகும். அது திமுகவுக்கோ, திமுக காங்கிரஸ் கூட்டணிக்கோ எதிரானது அல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று விளக்கம் அளித்தார்.
கராத்தே விளக்கம் அளித்த பின்னரும், இன்று அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருப்பது ப.சிதம்பரம் ஆதரவாளர்களையே யோசிக்க வைத்திருக்கிறது.
“கே.எஸ்.அழகிரியே சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளராக அறியப்பட்டவர்தான். ஆனால், அவர் தலைவரான புதிதில் நான் யாருக்கும் ஆதரவாளன் கிடையாது என்று ப.சிதம்பரம் தரப்பை அதிரவைத்தார். ப.சிதம்பரம் தேர்தல் அறிக்கை தயாரிப்பு உள்ளிட்ட பணிகளில் தீவிரம் காட்டிவந்த நிலையில், தமிழக காங்கிரஸ் விவகாரங்களில் அவர் தலையிடுவதில்லை. இந்த நிலையில் கே.எஸ்.அழகிரி தனி அணியாக செயல்பட முனைகிறாரோ என்ற சந்தேகமும் எழுகிறது” என்கிறார்கள் அவர்கள்.
கராத்தே நீக்கம் பற்றி முன்னரே அறிந்த சில காங்கிரஸ் புள்ளிகள், கே.எஸ்.அழகிரியை தொடர்புகொண்டு, ‘கே.என்.நேருவும் விளக்கம் கொடுத்திட்டாரு. கராத்தேவும் தனிப்பட்ட கருத்துதான்னு சொல்லிட்டாரு. அப்புறம் எதுக்கு அவர் மேல் நடவடிக்கை எடுக்கணும்?’ என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு அழகிரி, ‘கட்சிக்குள்ள எந்த பிரச்சினையும் இல்ல. கராத்தேவை நீக்கியே ஆகணும்னு திமுக தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்குறாங்க. அவர நீக்கலேன்னா திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கே ஆபத்துனு சொல்றாங்க. அதனால, திமுகவ சமாதானப்படுத்ததான் இந்த தற்காலிக நடவடிக்கை’ என்று பதிலளித்துள்ளார்.
இந்த நடவடிக்கை பற்றி கராத்தே தியாகராஜன் அளிக்கும் விளக்கம் காங்கிரஸில் மேலும் சலசலப்பை ஏற்படுத்தக் கூடும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.