மக்களை சமாதானப்படுத்தவே ஆலையை அரசு மூடுகிறது: ஸ்டெர்லைட்!

ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லை என்று உயர் நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையைத் தமிழக அரசு மூடிவிட்ட நிலையில் வேதாந்தா நிறுவனம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணையில் உள்ளது. முந்தைய விசாரணையின்போது, ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது அரசின் கொள்கை முடிவு எனவும், அதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. நேற்று (ஜூன் 26) ஸ்டெர்லைட் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சார்பில் விளக்க மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அம்மனுவில், “துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களை சமாதானப்படுத்தவே ஆலையைத் தமிழக அரசு மூடிவிட்டது. ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்குக் கொள்கை முடிவெடுத்ததாக அரசு கூறுவதில் எந்த ஆதாரமும் இல்லை. ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று 2011ஆம் ஆண்டில் தேசியச் சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வுக் கழகம் தெரிவித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பிறகு காற்று, தண்ணீர் மாசு குறைந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குப் பிறகு மக்களை சமாதானப்படுத்துவதற்கும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கும் பணிந்து ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் தூத்துக்குடியின் சுற்றுச்சூழல் நலனுக்காக ஸ்டெர்லைட் நிறுவனம் ரூ.500 கோடி செலவு செய்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க 1.55 லட்சம் மக்கள் ஆதரவளித்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் போராட்டங்களின்போது 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டு மனித உரிமைகள் மீறப்பட்டதாகப் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. மேலும், ஸ்டெர்லைட் தாக்கத்தால் சுற்றுச்சூழல் மாசு, நிலத்தடி நீர் பாதிப்பு, பல்வேறு நோய்கள் என ஏராளமான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும், தூத்துக்குடி மக்களிடம் நெல்லை மருத்துவக் கல்லூரி நடத்திய ஆய்வில் ஸ்டெர்லைட் ஆலையால் பல நோய்கள் உண்டாகியுள்ளதாகத் தெரியவந்துள்ளது. மேலும் கர்ப்பிணிப் பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், ஆலையால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று ஸ்டெர்லைட் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.