பிரிவின் துயரோடு விடைபெற்ற சேலம் கலெக்டர் ரோகிணி!

சேலம்  மாவட்ட ஆட்சியர் ரோகிணி ஆர். பாஜிபாகரே, தமிழ்நாடு இசை பல்கலைக்கழகத்தின் பதிவாளராக நேற்று மாற்றப்பட்ட நிலையில், இன்று (28.6.2019) சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டத்தில் இறுதியாகக் கலந்து கொண்டு ''நான் நிறையப் பரிசுகள் வழங்கியிருக்கிறேன்.
ஆனால் இந்த சால்வையே எனக்குப் பெரிய பரிசாக நினைத்து எடுத்துச் செல்லுவேன்'' என உணர்ச்சி பொங்கப் பேசி விடைபெற்றார்.


எப்போதும் துறு துறுவென இருக்கும் மாவட்ட ஆட்சியர் ரோகிணி, இன்று சற்று சோகமாகவே இருந்தார். விவசாயிகள் கூட்டம் என்றாலே கலகலப்பும் சிரிப்பும் இருக்கும். காரணம், 'நான் கலெக்டர் என்பதைவிட, ஒரு விவசாயியின் மகள் என்பதையே பெருமையாக நினைக்கிறேன்'' என்று ஆட்சியர் ரோகிணி அடிக்கடி கூறுவார். இவர் சேலம் ஆட்சியராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு, சிறிய கலந்தாய்வு அறையில் நடைபெற்ற விவசாயிகளின் குறை தீர்ப்பு கூட்டத்தை, இவர் ஆட்சியராகப் பொறுப்பேற்ற பிறகு குளிர்சாதன வசதியோடுகூடிய பெரிய ஆடிட்டோரியத்திற்கு மாற்றினார்.

இதனால்  நெகிழ்ந்துபோன விவசாயிகள், '' இதுவரை எந்த கலெக்டரும் விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டத்தை குளிரூட்டப்பட்ட பெரிய அரங்கில் நடத்தியதில்லை. நீங்கள் விவசாயிகளின் உணர்வுகளைப் புரிந்துவைத்திருக்கிறீர்கள். உங்களுக்கு நாங்கள் சிலை வைக்கப் போகிறோம்'' என்று உணர்ச்சி வசப்பட்டும் உரிமையோடும் பேசுவார்கள். விவசாயிகளின் அனைத்து கேள்விகளுக்கும் புன்னகையோடே பதிலளிப்பார்.

ஆனால், இன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டத்தில், பெரும்பாலான விவசாயிகள் அமைதியாகவே இருந்தார்கள். பல விவசாயிகள் எழுந்து, ''உங்களைப் பார்க்கவே வருத்தமாக இருக்கிறது. உங்ககிட்ட நிறைய கேள்வி கேட்கனுமுன்னு இருந்தேன். காலை பேப்பரில் நீங்கள் மாற்றப்பட்ட செய்தியைப் படித்து அதிர்ந்து போயிட்டேன். சில வார்த்தைகள் உங்களைப் பாராட்டி பேசிக்கிறேன்'' என்றவர், '' நீங்கள் தேர்தலில் நின்றால் நிச்சயம் சி.எம் ஆகலாம். உங்கள் பின்னாடி மக்கள் சக்தி இருக்கிறது'' என்றார். அதைக் கேட்டு லேசாகப் புன்முறுவல் செய்தார்.

அடுத்து பேசிய விவசாயி வையாபுரி, ''நயன்தாரா நடித்த 'அறம்' படத்தில் வரும் கலெக்டரைப் போல மக்களுக்கு நல்லது செய்திருக்கீங்க'' என்றார். அதற்கு ஆட்சியர்,  ''எனக்கு நடிக்கத் தெரியாது. மக்களுக்கு என்னால் முடிந்த வரை நல்லது செய்திருக்கிறேன். நான் இல்லையென்றாலும் மாவட்ட நிர்வாகம் உங்களுடைய குறைகளைத் தீர்க்கும்'' என்றார்.

அதையடுத்து விவசாயிகள், மாவட்ட ஆட்சியர் ரோகிணிக்கு சால்வை அணிவித்தார்கள். அந்த சால்வையைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர், ''நான் நிறையப் பரிசுகள் வழங்கி இருக்கிறேன். ஆனால் இந்த சால்வையே எனக்குப் பெரிய பரிசு. இதை எடுத்துச் செல்லுவேன்'' என்று கூறும்போது கண் கலங்கியது. பேச முடியாமல் அனைவருக்கும் வணக்கம் கூறி விடைபெற்றார்.

வெளியே வந்த ஆட்சியரைச் சூழ்ந்துகொண்டு பத்திரிகையாளர்கள் பேட்டி கேட்க, ''தயவுசெய்து வேண்டாம். சேம்பருக்கு வாருங்கள் பேசலாம்'' என்றார். சேம்பருக்கு சென்றதும், ''சேலம் மக்களை என்னால் மறக்கவே முடியாது. ரொம்ப அன்பானவர்கள். பத்திரிகையாளர்கள், நான் நல்லது செய்திருந்தாலும் கெட்டது நடந்திருந்தாலும் செய்தி போடுவதோடு என் வாட்ஸ்அப்பிற்கும் அனுப்பியதால் தவறுகள் திருத்திக்கொள்ள முடிந்தது. மாவட்டத்தின் வளர்ச்சியில் உங்கள் பங்களிப்பும் அளப்பரியது. சிறப்பாகப் பணியாற்றுகள். நான் எங்கிருந்தாலும் சேலம் மக்கள்மீது தனி அன்பும் பாசமும் வைத்திருப்பேன்'' என்றார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

No comments

Powered by Blogger.