நீட் முடிவு: திருப்பூர் மாணவி தற்கொலை!

நாடு முழுவதும் நீட் தேர்வு முடிவுகள் இன்று (ஜூன் 5) வெளியாயின. தமிழகத்தில் 48.57% பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். நீட் தேர்வில் 1 மதிப்பெண்ணில் தோல்வியடைந்ததால் திருப்பூரைச் சேர்ந்த மாணவி ரிதுஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ஏற்கனவே நீட் தேர்வால் தங்களது மருத்துவக் கனவு பறிபோனதால் அனிதா, பிரதீபா ஆகிய மாணவிகள் தற்கொலை செய்துகொண்டனர். இந்நிலையில் தற்போது மீண்டுமொரு மாணவி தற்கொலை செய்துகொண்டிருப்பது மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் 600க்கு 490 மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சியடைந்துள்ளார்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர்வதற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு கடந்த மே 5ஆம் தேதியன்று நடைபெற்றது. இந்நிலையில், அதன் முடிவுகளை தேசிய தேர்வுகள் முகமை இன்று இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 14 லட்சத்து 10 ஆயிரத்து 375 மாணவர்கள் இத்தேர்வை எழுதினர். இதில் 56.50 சதவிகித மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தைப் பொருத்தவரை 1.40 லட்சம் மாணவ, மாணவியர் தேர்வினை எழுதிய நிலையில், 48.57 சதவிகிதம் பேரே தேர்ச்சியடைந்துள்ளனர்.
மாற்றுத்திறனாளிப் பிரிவில் தேர்வு எழுதிய கார்வண்ண பிரபு என்ற தமிழக மாணவர், 720 மதிப்பெண்ணிற்கு 572 மதிப்பெண்கள் எடுத்து தேசிய அளவில் 5ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இந்திய அளவில் 57ஆவது இடத்தைப் பிடித்துள்ள ஸ்ருதி என்ற மாணவி, 720 மதிப்பெண்ணிற்கு 685 மதிப்பெண்கள் பெற்று தமிழகத்தில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். எனினும், பொதுப் பட்டியல் பிரிவில் தேர்வு எழுதிய தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் யாரும் முதல் 50 இடங்களில் தேர்ச்சி பெறவில்லை.
தமிழகத்தைப் பொறுத்தவரை, கடந்தாண்டை காட்டிலும் (39.56%) இந்தாண்டு தேர்ச்சி விகிதம் 9.01 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 48.57% தேர்ச்சியுடன் 59,785 தமிழக மாணவ மாணவியர் நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். அதிகபட்சமாக, டெல்லியில் 74.92% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இரண்டாம் இடத்தில் ஹரியானா 73.41 சதவிகிதத்துடன் தேர்ச்சி பெற்றுள்ளது. இதற்கடுத்த இடங்களில் சண்டிகர் - 73.24 %, ஆந்திரம் - 70.72 %, ராஜஸ்தான் - 69.66% ஆகியன இடம்பெற்றுள்ளன. ராஜஸ்தானைச் சேர்ந்த நளின் கந்தேல்வால் 720 மதிப்பெண்ணிற்கு 701 மதிப்பெண்கள் பெற்று இந்திய அளவில் முதலிடத்தைப் பிடித்தார். டெல்லியைச் சேர்ந்த பாவிக் பன்சால் என்ற மாணவர் இரண்டாம் இடத்தையும், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அக்‌ஷத் கவுஷிக் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.