சஹலின் சுழலில் சுருண்ட தெ.ஆ.!

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சௌதாம்டன் மைதானத்தில் ஆடிவருகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதல் இரு போட்டிகளில் தோல்வியைத் தழுவியுள்ள தென் ஆப்பிரிக்க அணி கட்டாய வெற்றியை எதிர்பார்த்துக் களமிறங்கியது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு அந்த அணியின் தொடக்கம் சரியாக அமையவில்லை. தொடக்கவீரர்கள் ஹசிம் ஆம்லா, டி காக் இருவரும் முறையே 6,10 ரன்களுக்கு பும்ரா பந்துவீச்சில் வெளியேறினர். பின்னர் வந்த கேப்டன் டு ப்ளஸிஸ், ராஸி வன் டர் டஸ்ஸன் இருவரும் விக்கெட் இழப்பை தடுக்க முயற்சித்தனர். 37 பந்துகளில் 22 ரன்கள் எடுத்திருந்த டஸ்ஸன் சஹல் பந்து வீச்சில் ஸ்டம்புகளை பறிகொடுத்தார். மறுபுறம் நிலைத்து நின்ற டு பிளஸிஸையும் ஸ்டம்புகள் சிதற சஹல் வெளியேற்றினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டுமினி 3 பந்துகளில் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் எல்பிடபுள்யூ முறையில் ஆட்டமிழந்தார். டேவிட் மில்லரும் ஆன்டில் பேலுக்வாயோவும் விக்கெட் இழப்பை தடுத்ததோடு கௌரவமான ஸ்கோரை அடைய முயற்சித்தனர். இந்த இரு விக்கெட்டுகளையும் சஹல் தன் வசமாக்கினார். 158 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து அந்த அணி தடுமாறியது. 200 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இந்திய அணி கைப்பற்றிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பின்னர் வந்த கிறிஸ் மோரிஸ் அதிரடியாக ஆடி ரன் சேர்ப்பில் ஈடுபட்டார். 2 சிக்ஸர்களுடன் 34 பந்துகளில் 42 ரன்களைச் சேர்த்த அவரை புவனேஷ்வர் குமார் வெளியேற்றினார். இம்ரான் தாஹிரும் புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். ரபாடா 31 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் 50 ஓவர்கள் முடிவில் அந்த அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 227 ரன்கள் சேர்த்துள்ளது. இந்தத் தொடரின் எட்டாவது போட்டியாக இருந்தாலும் சௌதாம்டனில் நடைபெறும் முதல் போட்டி இதுவாகும். இந்த மைதானத்தில் சீரற்ற முறையில் பந்துகள் பவுன்ஸ் ஆகின்றன; நன்றாக திரும்புகின்றன. இந்நிலையில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களைக் கொண்டு களமிறங்கிய இந்திய அணிக்கு அது சாதகமாக அமைந்துள்ளது. 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று எளிய இலக்காக தெரிந்தாலும் மைதானத்தின் தன்மை பந்துவீச்சுக்கு சாதகமாக உள்ளதால் இந்திய அணி கவனமாக ஆட வேண்டியுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.