தனுஷுக்கு புதிய ஜோடி ரெடி!
தனுஷ் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக மெஹ்ரின் பிர்ஸாடா நடிக்கவுள்ளார்.
சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான நெஞ்சில் துணிவிருந்தால் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் மெஹ்ரின் பிர்ஸாடா. அதன்பின் விஜய்தேவரகொண்டா தமிழில் அறிமுகமான நோட்டா படத்தில் நடித்திருந்தார். தற்போது துரை செந்தில் குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் மெஹ்ரின் இணைந்துள்ளார்.
எதிர் நீச்சல், காக்கி சட்டை ஆகிய படங்களை இயக்கிய துரை செந்தில் குமார் தனுஷை கதாநாயகனாகக் கொண்டு கொடி படத்தை இயக்கியிருந்தார். தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்த அப்படத்தில் த்ரிஷா, அனுபமா பரமேஸ்வரன் என இரு நாயகிகள் நடித்திருந்தனர்.
தற்போது இவர் இயக்கும் இந்தப் படத்திலும் தனுஷ் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். தந்தையாக தனுஷ் நடிக்கும் கதாபாத்திரத்தோடு சினேகா ஜோடிசேர்ந்து நடிக்கிறார். மகன் கதாபாத்திரத்திற்கு யார் ஜோடியாக நடிப்பது என்பதை படக்குழு அறிவிக்காத நிலையில் தற்போது மெஹ்ரின் பிர்ஸாடா நடிப்பதை உறுதிசெய்துள்ளனர்.
குற்றாலத்தில் நடைபெற்று வந்த முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ள நிலையில் அடுத்த கட்டப் படப்பிடிப்பு வரும் 24ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் சார்பாக டி.ஜி,தியாகராஜன் இப்படத்தை தயாரிக்கிறார்.
தனுஷ் நடித்துள்ள ‘பக்கிரி’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஜூன் 21ஆம் தேதி வெளியாகவுள்ளது.

.jpeg
)





கருத்துகள் இல்லை