P626ஆம் இலக்க கப்பலை கஜபாகு என இலங்கை கடற்படையின் கப்பலாக அதிகாரப்படுத்தும் நிகழ்வு!!📷

மகாசங்கத்தினர் உள்ளிட்ட சர்வ மதத் தலைவர்களும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட, பாதுகாப்பு பதவிநிலை பிரதானி அட்மிரல் ரவீந்ர விஜேகுனரத்ன, இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் டி சில்வா, வான்படை தளபதி எயார் மாஷல் சுமங்கல டயஸ் ஆகியோரும் இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்க தூதுவர் எலினா டெப்லிட்ஸ் உள்ளிட்ட அதிதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
புதிய கப்பலின் கட்டளை அதிகாரி கெப்டன் ரோஹித அபேசிங்கவிடம் கப்பலை கையளிப்பதற்கான சான்றுப் பத்திரத்தினை ஜனாதிபதி அவர்கள் வழங்கிவைத்தார்.
அதனைத் தொடர்ந்து கஜபாகு எனும் பெயரில் இலங்கை கடற்படை கப்பலாக அதிகாரப்படுத்தப்பட்ட புதிய ஆழ்கடல் கண்காணிப்பு கப்பலின் பெயர்ப்பலகையையும் உத்தியோகபூர்வ இலட்சினையையும் சர்வ மதத் தலைவர்களின் ஆசீர்வாதத்துடன் ஜனாதிபதி அவர்கள் திறந்துவைத்தார்.
ஜனாதிபதி அவர்கள் இக்கப்பலை பார்வையிட்டதோடு, கடற்படை தளபதியினால் குறித்த கப்பலின் செயற்பாடுகள் மற்றும் தயாரிப்பு தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டது.
அமெரிக்க எல்லைப் பாதுகாப்பு படையணிக்கு சொந்தமாகவிருந்த இக்கப்பல், கடந்த வருடம் ஓகஸ்ட் 27ஆம் திகதி ஹவாய் தீவின் ஹொனொலுலு நகரில் இலங்கை கடற்படையிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. 115 மீற்றர் நீளமும் 13 மீற்றர் அகலமும் கொண்ட இக்கப்பல் மணித்தியாலத்திற்கு 28 கடல் மைல்கள் வேகத்தில் பயணிக்கக்கூடியதுடன் 3302 தொன் கொள்ளளவினை கொண்டது. 22 அதிகாரிகள் உட்பட மொத்தமாக 111 பேர் இக்கப்பலில் பணிபுரிகின்றார்கள்.
நவீன ரக ஆயுதங்கள், தொலைத்தொடர்பு உபகரணங்கள் மற்றும் ஏனைய செயற்பாட்டு கட்டமைப்புகளைக் கொண்டுள்ள இக்கப்பல், இலங்கை கடற்படைக்கு கையளிக்கப்பட்டதன் பின்னர் இலங்கை கடற்படையினர் வசம் காணப்படும் விசாலமான கப்பல் இதுவாகுமென்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையின் ஆழ்கடல் பிரதேசத்தில் கண்காணிப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகள், கடல் வளங்களை பாதுகாத்தல் மற்றும் கடற்படை செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்படும் கப்பல் மற்றும் இயந்திரங்களுக்கு உதவியளிப்பதற்காக இக்கப்பல் பயன்படுத்தப்படவுள்ளது.
கருத்துகள் இல்லை