பொலிஸாருக்கு எதிரான முறைப்பாட்டை பதிவு செய்ய புது இணையத்தளம்!

பொலிஸாருக்கு எதிரான பொதுமக்களின் முறைப்பாட்டை இணையத்தளம் மூலமாக பெற்றுக்கொள்வதற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு புதிய இணையத்தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.


இதன் முகவரி www.npc.gov.lk என்பதாகும்.

இதன் மூலம் பொது மக்கள் தங்களின் முறைப்பாடுகள் தொடர்பில் துரிதமான தீர்வினைப் பெற்றுக்கொள்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த இணையத்தள அறிமுக நிகழ்வு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்றது.

இந்த வைபவத்தில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் பி.எச்.மனத்துங்க, செயலாளர் சமன் திசாநாயக்க முதலானோர் கலந்துகொண்டனர். பொதுமக்கள் தமது பிரச்சினைகள் தொடர்பில் பொலிஸுக்குச் செய்யும் முறைப்பாடுகள் திருப்தியாகத் தீர்க்கப்படாவிட்டால் அல்லது தீர்வைப் பெற்றுக்கொடுப்பதில் தாமதம் ஏற்படுத்தப்பட்டால் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு முறைப்பாடு செய்து தீர்வைப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கின்ற போதிலும் அதில் மக்கள் நடைமுறைச் சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர்.

எழுத்து மூலமாகவும் வாய் மூலமாகவும் காணொளி மூலமாகவும் இணையத்தளத்தின் ஊடாக முறைப்பாடுகளை செய்யக்கூடிய வகையில் தற்பொழுது தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் இணையத்தளம் மேம்படுத்தப்பட்டிருப்பதாக பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேபோன்று பொலிஸ் தொடர்பில் பொதுமக்கள் காணும் சில தவறுகளைக் கூட தமது கையடக்க தொலைப்பேசி ஊடாக பதிவுசெய்து தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்கின்றது.

தாம் செய்த முறைபாடு தொடர்பில் என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை கண்டறியவும் முடியும். முறைப்பாட்டை சமர்ப்பிக்கும் பொழுது கணணியின் ஊடாக வழங்கப்படும் குறியீட்டை 1960 என்ற தொலைப்பேசி இலக்கத்துடன் தொடர்புக் கொண்டு குறிப்பிடுவதன் மூலம் இதனை அறிந்துக்கொள்ள முடியும்.

No comments

Powered by Blogger.