நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை வலியுறுத்தாதது ஏன்?

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை திரும்பப் பெற்றது ஏன் என்பது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். மறைந்த விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் ராதாமணியின் படத்திறப்பு நிகழ்வு இன்று (ஜூன் 30) அவரது சொந்த ஊரான கலிஞ்சிக்குப்பத்தில் நடைபெற்றது. அதில் திமுக தலைவர் ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மக்களவை உறுப்பினர்


ஜெகத்ரட்சகன், எம்.எல்.ஏ.க்கள் வெ.கணேசன், உதயசூரியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ராதாமணியின் உருவப் படத்தை திறந்துவைத்து உரையாற்றிய திமுக தலைவர் ஸ்டாலின், “திமுகவில் 33 ஆண்டுகாலம் ஒன்றியச் செயலாளராக பதவி வகித்திருக்கிறார் ராதாமணி. அதுவே பெரிய சாதனைதான். ஏனெனில் திமுகவில் அமைச்சர், எம்.எல்.ஏ, எம்.பியாக எளிதில் ஆகிவிடலாம். ஆனால் ஒரு கிளைச் செயலாளர் ஆவது அவ்வளவு எளிதல்ல. சட்டமன்றத்தில் ராதாமணி பேசுகிறார் என்றால் திமுக எம்.எல்.ஏ.க்கள் மட்டுமல்லாது அதிமுக எம்.எல்.ஏ.க்களும் கூர்ந்து கவனிப்பர்.


 சிரிக்க வைக்கக்கூடிய அளவுக்கு மட்டுமல்ல சிந்திக்க வைக்கக்கூடிய அளவுக்கும் பேசும் ஆற்றல் வாய்ந்தவர்” என்று பாராட்டினார். தொடர்ந்தவர், “மக்களவைத் தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றிபெற்றிருந்தாலும், தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் ஒரு குறை இருக்கிறது. இந்த ஆட்சி தொடர்ந்துகொண்டு இருக்கிறதே, அதை எப்போது போக்கப் போகிறீர்கள் என்பதுதான் அது. கவலைப்படாதீர்கள். ராதாமணி என்ன உணர்வோடு பாடுபட்டாரோ அதே உணர்வோடு நாமும் பாடுபட்டால் எட்டப்பாடி ஆட்சி இருக்காது” என்றும் தெரிவித்தார்.


 நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பாக பேசியவர், “3 சட்டமன்ற உறுப்பினர்களின் பதவியைப் பறிக்க அதிமுக அரசு திட்டமிட்டது. அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காக சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தோம். ஏனெனில், சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தால் முதலில் அதனைத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதால், எம்.எல்.ஏ.க்கள் மீது அவர் நடவடிக்கை எடுக்க வாய்ப்பில்லாமல் போய்விடும். அதற்காகவே அந்த அறிவிப்பை வெளியிட்டோம்.


இதனை புரிந்துகொண்ட உச்ச நீதிமன்றம் மூன்று எம்.எல்.ஏ.க்களின் பதவியையும் எக்காரணத்தைக் கொண்டும் பறிக்கக் கூடாது என்று தடை உத்தரவு பிறப்பித்தது. கலைஞர் நமக்கு கற்றுத் தந்திருக்கும் ராஜதந்திரத்தை நாம் அன்றைக்கு பயன்படுத்தினோம். ஆனால் திமுக பதுங்குகிறது என்று பத்திரிகைகளில் செய்தி வந்திருக்கிறது.

 புலி எப்போதும் ஓடி ஒளிவதற்காக பதுங்காது. பாய்வதற்காகத்தான் அது பதுங்கும். பாய வேண்டிய நேரத்தில் பாய்வோம். முடிவுகட்ட வேண்டிய நேரத்தில் முடிவெடுப்போம்” என்று கூறி தனது உரையை முடித்தார்.

No comments

Powered by Blogger.