நீர் தட்டுப்பாட்டுக்கு ஒரே தீர்வு இல்லை-மோடி!!

மக்களவைத் தேர்தலுக்கு முன் பிப்ரவரி 24ஆம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி கடைசியாக மன்கிபாத் வானொலி நிகழ்ச்சியில் பேசியிருந்தார். அதைத்தொடர்ந்து தேர்தல் நடைபெற்றதால் மன்கிபாத் நிகழ்ச்சியில் மோடி பங்கேற்கவில்லை. அவர் இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு இன்று (ஜூன் 30) மீண்டும் மன்கிபாத் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது பேசிய மோடி, “தேர்தல் பணிகளுக்கு இடையே மன்கிபாத் நிகழ்ச்சியின் கொண்டாட்டத்தை தவறவிட்டேன். மன்கிபாத் நிகழ்ச்சியில் பேசுவது நானாகவும் எனது குரலாகவும் இருக்கலாம். ஆனால் நான் பேசும் கதை உங்களுடையது. தேர்தல் முடிந்த உடனே உங்களுடன் பேச வேண்டுமென நான் விரும்பினேன். ஆனால் பிறகு முடிவை மாற்றிக்கொண்டேன். எப்போதும் போல ஞாயிற்றுக்கிழமையன்று உங்களுடன் பேசலாம் என முடிவெடுத்தேன். இந்த தினத்துக்காக நீண்ட நாட்களாக காத்திருந்தேன். எமர்ஜென்சி கொண்டுவரப்பட்டபோது அதற்கு எதிரான குரல்கள் அரசியல் தளத்திலிருந்தும், அரசியல்வாதிகளிடமிருந்தும் மட்டும் ஒலிக்கவில்லை. எமர்ஜென்சிக்கு எதிரான இயக்கம் சிறைச்சாலைகளுடன் சுருங்கிவிடவில்லை. மக்களின் மனங்களில் மிகப்பெரும் கோபம் உண்டாகியது. தேர்தல் பணிச்சுமையின் இடையே நான் ஏன் கேதர்நாத்துக்கு சென்றேன் என பலரும் கேள்வியெழுப்புகின்றனர். என்னையே நான் சந்திப்பதற்கான வாய்ப்புதான் அது. என்னை சந்திப்பதற்காக அப்பயணத்தை மேற்கொண்டேன். என்னை நடக்க வைப்பதும், ஓட வைப்பதும், என்னை உயிர்ப்புடனும் உற்சாகத்துடன் வைத்திருப்பதும் நீங்கள்தான் என்பது உங்களுக்கே தெரியாது. இன்று எனது உள்ளம் மகிழ்ச்சியால் நிறைந்திருக்கிறது. தேர்தல் ஆணையத்திற்கும், தேர்தல் பணிகளில் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு நபருக்கும், விழிப்படைந்த வாக்காளர்களுக்கும் நான் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழாவான தேர்தலை நமது நாடு கொண்டாடி முடித்துள்ளது. ஏழை முதல் பணக்காரர்கள் வரை அனைவரும் நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்க ஆர்வம் காட்டினர். மக்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளதையே இது பிரதிபலிக்கிறது. ஆண்களைப் போலவே பெண்களும் இத்தேர்தலில் உற்சாகமாக வாக்களித்துள்ளனர். கடந்த சில மாதங்களாக பலரும் நீர் தொடர்பான பிரச்சினைகள் பற்றி கடிதம் அனுப்பியுள்ளனர். நீர் சேமிப்பு தொடர்பாக மக்களின் விழிப்புணர்வு குறித்து மகிழ்ச்சியடைகிறேன். நீர் சேமிப்பின் முக்கியத்துவம் குறித்து கிராம தலைவர்களுக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன். கூட்டு முயற்சியால் மட்டுமே இப்பிரச்சினையை தீர்க்க முடியும். நாடு முழுவதும் நிலவும் நீர் தட்டுப்பாட்டை தீர்க்க ஒரே தீர்வு கிடையாது. தண்ணீரின் முக்கியத்துவத்தை மனதில் கொண்டு புதிய ஜலசக்தி அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளது. நீர் தொடர்பான முடிவுகளை வேகமாக எடுப்பதற்கு இந்த அமைச்சகம் உதவிபுரியும். மக்கள் கைகோர்க்கும்போது நீரை சேமிக்க முடியும். இன்றைய மன்கிபாத் நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு மூன்று கோரிக்கைகளை வைக்கிறேன். முதல் கோரிக்கை, தூய்மை இந்தியாவிற்கு மாபெரும் இயக்கம் உண்டானதுபோல நீர் சேமிப்பிற்கும் பெரும் இயக்கத்தை உண்டாக்க வேண்டும். இரண்டாவது கோரிக்கை, நீரை சேமிக்க பல நூற்றாண்டுகளாக நம் நாட்டில் கடைப்பிடிக்கப்பட்ட பாரம்பரிய முறைகளை மீண்டும் பயன்படுத்தி நீரை சேமிக்க உங்களை வலியுறுத்துகிறேன். மூன்றாவது கோரிக்கை, நீர் சேமிப்புக்கு சிறப்பாக பங்காற்றுவோர் குறித்த தகவல்களை பகிர வேண்டும். அடுத்த மாதம் மன்கிபாத்தின் அடுத்த எபிசோடில் நாம் அனைவரும் சந்திக்கலாம்” என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.