முதல்வருடன் புதிய தலைமை செயலாளர் சந்திப்பு!

தமிழகத்தின் தலைமைச் செயலாளராக பொறுப்பு வகித்த கிரிஜா வைத்தியநாதனின் பதவிக்காலம் (ஜூன் 30) இன்றுடன் நிறைவடைகிறது. இதைத்தொடர்ந்து, தமிழக நிதித்துறை கூடுதல் செயலாளராக இருந்த கே.சண்முகம் தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், புதிய தலைமை செயலாளர் சண்முகம் இன்று (ஜூன் 30) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சென்னை பசுமைவழிச்சாலையிலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
எடப்பாடியின் சொந்த மாவட்டமான சேலத்தை சேர்ந்தவர் சண்முகம். 1985ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர் இவர். நாளை தமிழக சட்டமன்றம் கூடவுள்ளதால் இந்த சந்திப்பில் மிக முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தலைமை செயலாளராக பதவியேற்றபின் என்னென்ன நடவடிக்கைகள் எடுப்பது, எந்த பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது என்பது பற்றி இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்படும்.
திமுக ஆட்சியின்போது இலவச வண்ணத் தொலைக்காட்சி, அதிமுக ஆட்சியின்போது அம்மா உணவகம் போன்ற சமூகநலத் திட்டங்களை செயல்படுத்தியவர் சண்முகம். இவர் நாளை (ஜூலை 1) தமிழக தலைமை செயலாளராக பதவியேற்பார் என ஆளுநர் வெளியிட்ட அறிவிப்பில் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இன்று பிற்பகல் 2 மணியளவில் புதிய டிஜிபியாக அறிவிக்கப்பட்டுள்ள ஜே.கே.திரிபாதி பதவியேற்கவுள்ளார். மேலும், கிரிஜா வைத்தியநாதனும் இன்று மதியம் பணி ஓய்வுபெறுகிறார்.

No comments

Powered by Blogger.