நாங்குநேரியில் உதயநிதி போட்டியிட்டால் ஆதரவு திருநாவுக்கரசர்!!

நாங்குநேரி உள்பட உதயநிதி எங்கு போட்டியிட்டாலும் அவருக்கு காங்கிரஸ் ஆதரவளிக்கும் என திருச்சி மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வெற்றிபெற்ற ஹெச்.வசந்தகுமார், தனது நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இதனால், நாங்குநேரி தொகுதி தற்போது காலியாக இருந்துவருகிறது. கடந்த 10ஆம் தேதி திருச்சியில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் பேசிய நடிகர் உதயநிதி ஸ்டாலின், அக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசரை நோக்கி, “நாங்குநேரி தொகுதியை திமுகவுக்கு விட்டுக்கொடுத்தால் நாங்கள் எளிதாக வெற்றிபெற்று விடுவோம். இது ஒரு கோரிக்கைதான்” என்று வலியுறுத்தியிருந்தார். இதனால் நாங்குநேரி தொகுதியில் போட்டியிடப்போவது திமுகவா அல்லது காங்கிரஸா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்தது. இந்த நிலையில் திருச்சியில் நேற்று (ஜூன் 29) செய்தியாளர்களை சந்தித்த திருநாவுக்கரசரிடம், உதயநிதி தேர்தலில் போட்டியிட்டால் ஆதரவு தருவீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “தேர்தலில் உதயநிதி போட்டியிட விரும்பினால், அவருக்கு திமுக சீட் அளித்தால் காங்கிரஸ் நிச்சயம் ஆதரிக்கும். உதயநிதி நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்டாலும் அல்லது வேறு எந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும் அவருக்கு ஆதரவு தருவோம். அதில் ஒன்றும் பிரச்சினையில்லை. ஆனால், நாங்குநேரி காங்கிரஸ் வெற்றிபெற்ற தொகுதி. ஆகவே அங்கு காங்கிரஸ் போட்டியிட வாய்ப்புகள் இருக்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.