தீர்க்க சுமங்கலியாக வாழ வேண்டுமா?03-06-19அமாசோம வழிபாடு செய்யுங்கள்!

அமாவாசை வழிபாட்டுக்கு எப்பொழுதுமே தனிச் சிறப்பு உண்டு. அப்படி, திங்களன்று ( 03-06-19 ) வருகின்ற அமாவாசையன்று சூரியன் முழுமையாக உதிக்கும் முன்பு அரசமரத்தை ‘ஸ்ரீமத் நாராயணனாக’ பாவித்து வழிபட்டு 108 முறை வலம் வரும் பெண்கள் தீர்க்க சுமங்கலியாக வாழலாம் என்பது ஐதீகம்  
அமா என்றால் அமாவாசை.சோமம் என்றால் சோம வாரம் என்று அழைக்கப்படும் திங்கட்கிழமையை குறிக்கும்.திங்கட்கிழமை அமாவாசை வருவது ‘அமா சோமம்’ என்று அழைக்கப்படுகிறது. அமாசோமம் வழிபாடு செய்வதால் தீர்க்க சுமங்கலியாக வாழலாம்.
முன்பொரு காலத்தில், காஞ்சீபுரத்தில் தேவசுவாமி, தனவதி தம்பதியர் வாழ்ந்து வந்தார்கள்.அவர்களுக்கு விஷ்ணு வாசன் என்ற மகனும், குணவதி என்ற மகளும் இருந்தனர். குணவதிக்கு திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்து, வசதியான இடத்தில் மாப்பிள்ளைப் பார்த்து திருமண நாளையும் குறித்தார்கள்.
திருமணநாள் நெருங்கியது. அதற்கான ஏற்பாடுகளும் தடபுடலாக நடந்து வந்தது. திருமணத்திற்கு 3 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் அவர்களது இல்லத்திற்கு முனிவர் ஒருவர் பிச்சை கேட்டு வந்தார். அவர் யாரிடம் பிச்சை வாங்கினாலும் ‘ தீர்க்க சுமங்கலி பவ’, ‘சுப மங்களம் நிலவட்டும்’ என்று ஆசி வழங்குவார். 
praying
அன்று மணப்பெண்ணான குணவதி அந்த முனிவருக்கு பிச்சையிட்டார். அப்போது குணவதியை அந்த முனிவர் ‘ தர்மவதி பவ’ என்று வாழ்த்தினார். இதை அருகிலிருந்து பார்த்த குணவதியின் தாயார் தனவதி முனிவரிடம்,  சுவாமி தர்மவதி பவ என்று என் மகளை வாழ்த்தினீர்கள்.அதன் அர்த்தம் என்ன? என்று கேட்டார்.
அதற்கு முனிவர் பதில் அளிக்காமல், தாயே நீ கலக்கத்துடன் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்கிறேன். உனது மகள் திருமணத்தின் போது மணமகள் கழுத்தில் மணமகன் மங்கலநாணை அணிவித்து அவர் கழுத்தில் மூன்று முடிச்சுகள் போட்டதும் மணமக்கள் அக்னியை வலம் வருவார்கள். அந்த சடங்குக்கு ‘சப்தபதி’ என்று பெயர். அந்த சடங்கு நடக்கும் வேளையில் மணமேடையிலேயே அவளை கைப்பிடித்த மணமகன் உயிர் விடும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது என்று கூறினார்.
திருமணத்திற்கு இன்னும் 3 நாட்களே உள்ளன. இந்த வேளையில் முனிவர் இப்படி சொல்கிறாரே என்று தனவதி கலங்கி நின்றாள். முனிவரிடம், ‘இதற்கு பரிகாரம் ஏதாவது இருக்கிறதா சுவாமி?’ என்று கேட்டாள். ‘நீ கவலைப்படாதே, உன் மகள் சுமங்கலியாக வாழ ஒரு வழி இருக்கிறது. கிழக்கு கடலில் ‘சிம்ஹத்வீபம்’ என்ற ஒரு தீவு உள்ளது. அங்கு ‘சோமா’ என்ற மூத்த சுமங்கலி வாழ்கிறார். அவர் மிகுந்த புண்ணியம் நிறைந்தவர்.சக்தி மிக்கவர்.அவர் முன்னிலையில் உன் மகளின் திருமணம் நடந்தால் எல்லாம் சுபமங்களமாக இருக்கும். உன் மகள் தீர்க்க சுமங்கலியாக வாழ்வாள்’ என்று சொல்லி விட்டு முனிவர் அங்கிருந்து புறப்பட்டார்.
அந்த முனிவர் கூறியதை குணவதியின் தந்தையும், அண்ணன் விஷ்ணுதாசனும் கேட்டுக் கொண்டிருந்தனர். தன் தங்கையின் வாழ்வு மங்களகரமாக அமைய வேண்டும் என்று இறைவனை பிரார்த்தனை செய்த விஷ்ணுதாசன், அந்த முனிவர் கூறிய தீவுக்கு சென்றான். அங்கு சோமா என்ற மூத்த சுமங்கலியின் வீடு எது என்பதை தெரிந்து கொண்டான். அப்போது சோமா வீட்டில் இல்லை.
அவரது கணவரிடம் விசாரித்த போது, சோமா அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்றிருப்பது தெரிய வந்தது. 
அந்த கோவிலுக்கு விஷ்ணுதாசன் சென்றார். அப்போது அங்கிருந்த மிகப்பெரிய அரச மரத்தை ஒரு மூதாட்டி வலம் வந்து கொண்டிருந்தார். அந்த மூதாட்டியின் பெயரே சோமா என்று தெரிந்து கொண்டார். அந்த மூதாட்டியின் காலில் விழுந்து கண்ணீர் விட்டு அழுது நடந்ததை கூறினார்.என் தங்கை திருமணத்துக்கு வந்து மணமக்களை வாழ்த்த வேண்டும் என்றார். சோமாவும் அதற்கு சம்மதித்தார். 
marriage
சோமா தம்பதிகளுடன் விஷ்ணுதாசன் தனது வீட்டுக்கு சென்றார்.அங்கு குணவதிக்கு திருமண சடங்குகள் நடந்து கொண்டிருந்தன.சோமா தம்பதியரை மனமேடைக்கு முன்பு அமர வைத்தனர்.மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்டியதும் கெட்டிமேளம் முழங்கியது.அடுத்ததாக அக்னியை வலம் வரும் சடங்கு நடந்தது. மணமகளின் வலது கையை பிடித்துக் கொண்டு மணமகன் அக்னியை வலம் வந்த போது திடீரென்று மயங்கி விழுந்து மரணம் அடைந்தான். 
இதைக் கண்டு திருமணத்துக்கு வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள்.சோமா தம்பதியரும் அதிர்ந்தார்கள்.உடனே சோமா பெருமாளிடம் வேண்டினார்.நான் மங்கல அட்சதை தூவி ஆசிர்வதித்த மணமகனுக்கு ஏன் இந்த நிலை என்று உருக்கமாக உள்ளம் உருகி வேண்டினார். 
அப்போது சோமாவின் காதுகளில் மட்டும் ஒரு அசரீரி ஒலித்தது.‘சோமா... நீ பல வருடங்களாக சோம வார அமாவாசையன்று கடை பிடித்த விரதப்பலனையும், அரச மரத்தை வலம் வந்த பலன்களையும் மணமகனுக்கு அளித்தால் அவர் உயிர் பெறுவார். மணமக்கள் நிடூழி வாழ்வார்கள்’’ என்றது. 
உடனே சோமா மணமகன் அருகில் சென்று தன் அமாசோமவார விரதப் பலன்களை அவருக்கு அளித்தார். உடனே மணமகன் உயிர் பெற்று எழுந்தார். திருமணத்துக்கு வந்திருந்தவர்கள் சோமாவை கரம் கூப்பி வணங்கினார்கள். திருமண விழா மீண்டும் களை கட்டியது. 
அப்போது சோமா,திருமணத்துக்கு வந்திருந்தவர்கள் மத்தியில் பேசினார்.நான் பல ஆண்டுகளாக அஸ்வத்த விருட்ச பூஜை செய்து வருகிறேன்.அமாவாசை தோறும் அரச மரத்தை 108 முறை வலம் வருகிறேன். திங்கட்கிழமையில் வரும் அமாவாசை அன்று சூரிய உதய நேரத்தில் அரச மரத்தை பூஜித்து வருகிறேன்.
பெண்கள் அரச மரத்தை மனம் ஒருங்கிணைந்து,பக்தியுடன் வலம் வந்தால், அவர்களுக்கு அபரிமிதமான சக்தி கிட்டும். அவர்கள் தீர்க்க சுமங்கலியாக வாழ்வார்கள் என்று கூறி அதற்கான மந்திரத்தையும் உபதேசித்தார்.
‘மூலதோ ப்ரும்ம ரூபாய மத்யதோ விஷ்ணு ரூபினே
அக்ரத் சிவ ரூமாய வருக்ஷ ராகாயதே நம’ என்பதுதான் அந்த மந்திரம்.
அரச மரத்தின் அடிப்பகுதி பிரம்மன், நடுப்பகுதி விஷ்ணு, மேல் பகுதி சிவன் என்று ரிக்வேதமும்,புராணங்களும் கூறுகின்றன. இந்த மந்திரமும் இதையே அடிப்படையாக கொண்டது. 
pooja
திங்கட்கிழமையில் வரும் அமாவாசையை சோமவார அமாவாசை என்றும், அமாசோமப் பிரதட்சிணம் என்றும், அரசமர நாராயண விரதம் என்றும் அழைக்கிறார்கள். அரச மரத்திற்கு சக்தி அதிகம். முப்பெரும் தெய்வங்களும் அரச மரத்தில் ஐக்கியமாகியுள்ளது என்பதை கருத்தில் கொண்டே முப்பெரும் தெய்வங்களும் இணைந்த வடிவமான விநாயகரை அரச மரத்தடியில் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். 
அரச மரம் கரியமில வாயுவை உள்ளிழுத்துக் கொண்டு பிராண வாயுவை அளிக்கிறது. அரச மரத்தடியில் அமர்ந்தாலோ வலம் வந்தாலோ உடலும் வளம் பெற்று ஆரோக்கியமான வாழ்வும் கிடைக்கும்.
அதிகாலையில் சூரியன் உதிக்கும் வேளையில் சூரிய கிரகணங்களும் அரச மரமும் இணைந்து வெளிப்படுத்தும் கதிர் வீச்சுக்கு அற்புதமான மருத்துவ குணம் உண்டு.பெண்கள் அரச மரத்தை வலம் வந்தால் கர்ப்பப்பை வலுப்பெறும்.ஆண்களுக்கு உயிரணுக்களின் சக்தி அதிகரிக்கும். மாணவ - மாணவிகளுக்கு மூளை நரம்புகளில் ரத்த ஓட்டம் சரியாக இயங்கி நினைவாற்றல் அதிகரிக்கும். 
அரசமரத்திற்கு ‘அஸ்வத்தா’ என்ற பெயரும் உண்டு.அரசமரத்தை எக்காரணம் கொண்டும் வெட்டுவது, அதன் கிளைகளை ஒடிப்பது போன்ற தகாத செயல்களைச் செய்தால், வறுமை, துர்மரணம், எடுத்தக் காரியங்களில் தடை போன்றவை ஏற்படும் என்று தர்ம சாஸ்திரம் கூறுகிறது.
அரச மரத்தை,காலை வேளையில் சூரிய உதயத்திற்கு முன்பாக குளித்துவிட்டு, தம்பதியர் சமேதராக 21 தடவைகள் வலம் வந்து வணங்கினால் குழந்தை பாக்கியம் கிட்டும்.
அரசமர நிழல் படுகின்ற நீர்நிலைகளில் வியாழக்கிழமை மற்றும் அமாவாசை தினங்களில் நீராடினால், திரிவேணி சங்கமத்தில் நீராடுவதால் உண்டாகும் பலன் கிடைக்கும்.அரசமரத்தைப் பார்த்ததும் வணங்குபவர்களுக்கு ஆயுள் வளரும்,செல்வம் பெருகும். கோயில்களில் உள்ள அரசமரத்தடியில் நாகர் சிலைகளுடன் விநாயகரும் எழுந்தருளியிருப்பதால். அங்கு அபரிதமான சக்தி இருக்கும்.அரசமரத்தை காலை 7 மணிக்குள் வலம் வருவது நல்லது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.