ராய் அதிரடியால் இங்கிலாந்து வெற்றி!

வங்கதேசத்துக்கு எதிரான நேற்றைய போட்டியில் இங்கிலாந்து அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் மே 30ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 12ஆவது ஆட்டத்தில் நேற்று (ஜூன் 8) கார்டிஃப் மைதானத்தில் வங்கதேசம் - இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களான ஜேசன் ராய் மற்றும் ஜானி பெய்ர்ஸ்டோவ் இணைந்து அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். முதல் விக்கெட்டுக்கு 128 ரன்கள் சேர்த்த நிலையில் 20ஆவது ஓவரில் மொர்டசா பந்தில் பெய்ர்ஸ்டோவ் வெளியேறினார்.
ஜோ ரூட் (21 ரன்), ஜோஸ் பட்லர் (64 ரன்) ஆகியோர் ஜேசன் ராய்க்கு நல்ல ஒத்துழைப்பு கொடுக்க, ஜேசன் ராய் சதத்தைக் கடந்தார். அவர் 121 பந்துகளில் 153 ரன்கள் குவித்து வெளியேறினார். இறுதியில் இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 386 ரன்கள் குவித்தது. வங்கதேச அணித் தரப்பில் முகமது சைஃபுதின் மற்றும் மெஹிதி ஹசன் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.
கடினமான இலக்கை நோக்கிக் களமிறங்கிய வங்கதேச அணி வீரர்கள் தொடக்கம் முதலே தங்களது விக்கெட்டுகளைப் பறிகொடுத்து வெளியேறினர். எனினும் ஒருபுறம் தனி ஆளாக நின்று போராடிய ஷகிப் அல் ஹசன் 119 பந்துகளில் 121 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். வங்கதேச அணி 49ஆவது ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 280 ரன்கள் மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது. இங்கிலாந்து அணித் தரப்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் பென் ஸ்டோக்ஸ் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். அதிரடியாக விளையாடி சதம் அடித்து மிகப் பெரிய ஸ்கோரை நோக்கி அணியை இட்டுச்சென்ற இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை இந்தியா எதிர்கொள்கிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.