ரோஜாவுக்கு இடமில்லை!

ஆந்திராவில் ஐந்து துணை முதல்வர்கள் உள்பட 25 பேர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

மக்களவைத் தேர்தலுடன் நடந்து முடிந்த ஆந்திர மாநிலச் சட்டமன்றத் தேர்தலில், 151 இடங்களைப் பிடித்த ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியது. மே 30ஆம் தேதி ஆந்திராவின் முதல்வராகப் பதவியேற்ற ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, சமுதாயத்திற்கு ஒருவர் வீதம் ஐந்து துணை முதல்வர்களை நியமிக்க முடிவெடுத்தார்.
அமராவதியில் உள்ள தலைமைச் செயலகத்துக்கு நேற்று (ஜூன் 8) வருகை புரிந்தவர், தன் தந்தை ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டியின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அரசியல் சாசனத்தில் கையெழுத்திட்டு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து நடந்த அமைச்சரவைப் பதவியேற்பு விழாவில், ஐந்து துணை முதல்வர்கள் உள்பட 25 பேருக்கும் அம்மாநில ஆளுநர் நரசிம்மன் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
இதுகுறித்து ஜெகன்மோகன் ரெட்டி, தனது ட்விட்டர் பக்கத்தில், “புதிதாக உருவாக்கப்பட்ட அமைச்சரவைக்கு எனது இதயப்பூர்வமான வாழ்த்துகள். நாம் எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடியும் ஆந்திர மக்களின் நலனுக்காகத் தான் இருக்க வேண்டும். நமது வேலை பிறருக்கு உதாரணமாக இருக்க வேண்டும். எல்லோருக்கும் எனது வாழ்த்துகள்” என வாழ்த்திப் பதிவிட்டுள்ளார்.
புதிதாகப் பதவியேற்றுள்ள 25 அமைச்சர்களில், ஏழு பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்கள். பட்டியலினத்தவர் ஐந்து பேர், காப்பு மற்றும் ரெட்டி வகுப்பிலிருந்து தலா நான்கு பேர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ளனர். மேலும் பழங்குடியினர், இஸ்லாமிய, கம்மா, சத்திரிய, வைசிய பிரிவுகளிலிருந்தும் தலா ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
ஐவர் துணை முதல்வராகவும் பதவியேற்றுக் கொண்டனர். அவர்களில் புஷ்பா ஸ்ரீவாணிக்கு பழங்குடியினர் நலத் துறையும், பிலி சுபாஷ் சந்திரபோஸுக்கு வருவாய் மற்றும் பதிவுத் துறையும், ஆலா காளி கிருஷ்ண ஸ்ரீனிவாஸுக்கு சுகாதாரத் துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், நாராயணசாமிக்கு வணிகவரித் துறையும், அம்ஜத் பாட்ஷாவுக்குச் சிறுபான்மையினர் நலத் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், நகரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரோஜா அமைச்சரவையில் இடம்பெறுவார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அமைச்சரவையில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இது அவரது ஆதரவாளர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டரை வருடங்களுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் 90 சதவிகித அமைச்சர்களை மாற்றியமைக்கவும் ஜெகன் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, அடுத்த முறை ரோஜாவுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இது ஒருபுறமிருக்க ரோஜாவுக்கு சபாநாயகர் பதவி வழங்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
Powered by Blogger.