கிளிநொச்சியில் தீ அணைப்பின் இலட்சணம்!!

நேற்று(09)  மதியம் சுமார் 12 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றுக்கு பின்புறமாக உள்ள சிறைச்சாலைக்கு ஒதுக்கப்பட்டுள்ள காணியில் ஏற்பட்ட தீ வேகமாக சுவாலை விட்டு  எரிந்து அருகில்  உள்ள காணிகளின் வான் பயிர்களும் எரியும் அளவுக்கு சென்றதோடு மின்சார வயர்களையும் தாக்கியிருந்தது.


எனவே உடனடியாக கரைச்சி பிரதேச சபையின் தீ அணைப்பு பிரிவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டு சற்று நேரத்தில்  தீ அணைப்பு இயந்திரம் மட்டும் குறித்த இடத்திற்கு வந்து சேர்ந்தது. வந்த வேகத்தில் நீர் பீச்சியடிக்கப்பட்டது. தீ ஓரளவு அடங்கியது. இந்த நிலையில்  இயந்திரத்தில் நீர் தீர்ந்துவிட்டது. பின்னர் சுமார் முப்பது நிமிடங்கள் வரை  நீர்த்தாங்களில் நீர் வரும் வரை  தீ அணைக்கும் இயந்திரம் காத்திருந்தது.  இதற்கிடையில் மீண்டும் தீ வேகமாக எரியத்  தொடங்கியது.

பின்பு நீர்த்தாங்களில் நீர் உரிய இடத்திற்கு வந்து சேரவே மீண்டும் தீ அணைக்கும் இயந்திரம் மூலம் நீர் பாச்சப்பட்டு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இச் செயற்பாடு அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்தது. முப்பது நிமிடங்கள் தாமதம் என்பது  மிகப்பெரும் அனர்தத்தை ஏற்படுத்தக் கூடியது. இதுவே ஒரு வியாபார நிலையங்கள் அமைந்துள்ள தொகுதியில் தீ பரவியிருந்தால் இந்த முப்பது நிமிடங்கள் தாமதம் என்பது அனைத்து கடைகளையும் எரித்து சாம்பலாக்கியிருக்கும்.

எனவே தீ அணைக்க புறப்படும் போதே அதற்குரிய தயார் நிலையில் செல்ல வேண்டும் அதற்கான அனைத்து வசதிவாய்ப்புக்களும் பிரதேச சபைக்கு வழங்கப்பட்டுள்ளது.இருந்து அவர்களது அக்கறையின்மையே நேற்றைய தீ அணைப்பு நடவடிக்கையில் வெளிப்பட்டது

எனவே இனி இப்படியொரு அனர்த்தம் ஏற்படும் போது இந்த தவறுகள் விடக்கூடாது என்பது பொது மக்களின் கோரிக்கை. அத்தோடு தீ அணைக்கும் இயந்திரத்தில்  பயிற்ப்பட்ட தீ அணைக்கும் வீரர்களை தவிர அரசியற் கட்சிகளின் பிரதிநிதிகள் ஏறி நின்றுக்கொண்டு அவர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்க கூடாது என்றும்  பொது மக்கள் கோருகின்றனர்.

கரைச்சி பிரதேச சபை இதனை கவனத்தில் எடுக்க வேண்டும்.
 (படம் -நீர் வரும் வரை காத்திருக்கும் தீ அணைக்கும் இயந்திரமும் அதன் மேல் தீ அணைக்கும் வீரர்களை இன்றி அரசியற் கட்சி ஒன்றின் பிரதிநிதியும்)

Powered by Blogger.