மாலத்தீவுக்கு மோடி சென்றது ஏன்?

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று, பிரதமராகப் பதவியேற்ற பிறகு முதல் பயணமாக மோடி மாலத்தீவு சென்றுள்ளார். இது இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான பயணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.


17ஆவது மக்களவைத் தேர்தல் முடிவில் மோடி மீண்டும் பிரதமராகப் பொறுப்பேற்றார். அதன் பிறகு நேற்று முதன்முறையாக கேரளம் சென்றார். கேரளத்தைத் தொடர்ந்து நேற்று மாலை மாலத்தீவு சென்றடைந்தார். அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாலத்தீவு அதிபர் முகமது இப்ராஹிமைச் சந்தித்த அவர், இந்திய கிரிக்கெட் அணி கையெழுத்திட்டு வழங்கிய பேட்டை பரிசளித்தார். பின்னர் வெளிநாட்டுத் தலைவர்களுக்கு வழங்கப்படும் மாலத்தீவின் உயரிய விருதான நிஷான் இசூதீன் விருதை, இந்தப் பயணத்தின்போது மோடிக்கு வழங்கி அந்நாடு கவுரவித்துள்ளது.

பிரதமரின் இந்தப் பயணம் ராணுவம் மற்றும் பாதுகாப்புக்கானது என்று கூறப்படுகிறது. இந்தியாவிலிருந்து 1200 கீ.மீ தொலைவில் இருக்கும் மாலத்தீவில் சுமார் 22,000 இந்தியர்கள் வசித்து வருகின்றனர். மாலத்தீவின் முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீன், நாட்டின் உள்கட்டுமான பணிகளுக்கான சீனாவிடமிருந்து மில்லியன் கணக்கான டாலர்களைப் பெற்றிருந்தார். இதனால் 2013இல் சீனாவிடம் மாலத்தீவு கடனில் சிக்கிக்கொண்டது. அந்த நேரத்தில் இந்தியாவுடனான நட்புறவை, அந்நாட்டு அரசு விலக்கியது. இதையடுத்து தற்போதைய அதிபர் முகமது இப்ராஹிம் பொறுப்பேற்றுக் கொண்டதை அடுத்து மீண்டும் இரு நாட்டுக்கு இடையே நட்புறவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த டிசம்பரில் 1.4 பில்லியன் டாலர்களை இந்தியா மாலத்தீவுக்கு வழங்கியது. இந்தத் தொகை சீனாவிடமிருந்து பெறப்பட்டிருந்த 3 பில்லியன் டாலர் கடனை அடைப்பதற்கு உதவியாக இருந்தது.

இந்தச் சூழலில் தான் மீண்டும் இரு நாட்டுக்கும் இடையேயான உறவை மேம்படுத்த மோடி மாலத்தீவு சென்றுள்ளார். இந்தச் சந்திப்பின்போது மோடியும் முகமது இப்ராஹிமும் மாலத்தீவில் இந்தியா அமைத்துள்ள கடற்படைக் கண்காணிப்பு மையத்தைத் திறந்து வைத்தனர். இதில் 10 ரேடார்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை சீனாவின் போர்க்கப்பல்களைத் தொடர்ந்து கண்காணிக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும், இந்தச் சந்திப்பில் இரு நாடுகளுக்கு மத்தியில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

மாலத்தீவைத் தொடர்ந்து இன்று (ஜூன் 9) பிரதமர் மோடி இலங்கை செல்லவுள்ளார். தேவாலயங்களில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவத்துக்குப் பிறகு இலங்கை செல்லும் முதல் பிரதமர் மோடி ஆவார். இலங்கைப் பயணத்தை முடித்துக்கொண்டு மதியம் இந்தியா திரும்பும் மோடி திருப்பதி செல்லவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமரின் இந்த வெளிநாட்டுப் பயணங்கள் மூலம், இந்தியக் கடல் எல்லையை ஒட்டியுள்ள நாடுகளுடனான உறவுகள் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

No comments

Powered by Blogger.