உலகக் கோப்பை: இந்தியாவுக்கு முதல் தோல்வி!📷

இங்கிலாந்து அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்துள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 38ஆவது ஆட்டத்தில் நேற்று
இங்கிலாந்து அணி தனது சொந்த மண்ணில் இந்தியாவை எதிர்கொண்டது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. காயத்திலிருந்து குணமாகி மீண்டும் அணிக்குத் திரும்பிய ஜேசன் ராயும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஜானி பேர்ஸ்டோவும் தொடக்கத்தில் நிதானமாக விளையாடி விக்கெட் இழக்காமல் பார்த்துக்கொண்டனர். பின்னர் பத்து ஓவர்கள் முடிந்த பிறகு அதிரடிக்கு மாறினர். இவர்களின் விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் இந்தியப் பந்துவீச்சாளர்கள் திணறினர். குறிப்பாக குல்தீப் யாதவ் மற்றும் யுஷ்வேந்திர சஹல் பந்துகளை அடித்து நொறுக்கினர்.
இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 160 ரன்கள் விளாசிய நிலையில் 23ஆவது ஓவரை வீசிய குல்தீப் யாதவ் பந்தில் சப்ஸ்டிடியூட் பீல்டராக வந்த ரவீந்திர ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து 66 ரன்களில் வெளியேறினார் ஜேசன் ராய். எனினும் மறுபுறம் அதிரடியாக விளையாடிய ஜானி பேர்ஸ்டோவ் சதமடித்தார். கடைசி ஓவர்களில் பென் ஸ்டோக்ஸ் அதிரடியாக விளையாடி 79 ரன்கள் குவிக்க இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 337 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் முகமது ஷமி 5 விக்கெட் வீழ்த்தினார். குல்தீப் யாதவ் 72 ரன்களும், யுஷ்வேந்திர சஹல் 88 ரன்களும், ஹர்திக் பாண்டியா 60 ரன்களும் வாரி வழங்கினர்.
கடினமான இலக்கை நோக்கிக் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான லோகேஷ் ராகுல் டக் அவுட் ஆகி ஏமாற்றினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ரோஹித் ஷர்மா கொடுத்த எளிய கேட்ச்சை ஜோ ரூட் தவறவிட்ட நிலையில், அந்த வாய்ப்பை ரோஹித் ஷர்மா சரியாகப் பயன்படுத்திக்கொண்டு நிதானமாக விளையாடினார். ரோஹித் ஷர்மா - விராட் கோலி ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 138 ரன்கள் குவித்தது. அப்போது கோலி ஆட்டமிழந்தவுடன் ரன் விகிதம் மீண்டும் குறையத் தொடங்கியது. சதமடித்த கையோடு ரோஹித் ஷர்மாவும் பெவிலியன் திரும்பினார். சிறிது நேரம் அதிரடி காட்டிய ஹர்திக் பாண்டியா 45 ரன்களுக்கு வெளியேற நிலைமை இன்னும் மோசமானது.
இந்திய அணியால் 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 306 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 31 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது. சதமடித்த ஜானி பேர்ஸ்டோவ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இத்தொடரில் இந்திய அணி சந்திக்கும் முதல் தோல்வி இதுவாகும். புள்ளிப் பட்டியலில் இந்திய அணி இரண்டாம் இடத்திலும் இங்கிலாந்து அணி நான்காம் இடத்திலும் உள்ளன.

No comments

Powered by Blogger.