வடகொரிய மண்ணில் அமெரிக்க அதிபர்!!

வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வடகொரியாவுக்குள் நுழைந்துள்ளார். நேற்று (ஜூன் 30) வடகொரியாவில் ராணுவமயமற்ற பகுதியில் வடகொரிய அதிபர் கிம் ஜோங் அன்னை டொனால்டு ட்ரம்ப் சந்தித்தார். வடகொரிய எல்லைக்குள் நுழைந்த டொனால்டு ட்ரம்பை கிம் ஜோங் அன் வரவேற்றார். இருவரும் கைகுலுக்கிக்கொண்டனர். இந்தக் காட்சிகள் சர்வதேச ஊடகங்களிலும் ஒளிபரப்பப்பட்டன. அணு ஆயுதங்கள் தொடர்பாக நிலுவையிலிருந்த பேச்சுவார்த்தைகளைப் புதுப்பிப்பதற்காக இந்தச் சந்திப்பு வாய்ப்பளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சந்திப்பு குறித்து பேசிய டொனால்டு ட்ரம்ப், “மிகப்பெரிய தருணம், மிகப்பெரிய முன்னேற்றம்” என்று தெரிவித்தார். மேலும், வடகொரியாவுக்குள் நுழைந்த அமெரிக்க அதிபர் ட்ரம்பின் தைரியத்தை கிம் ஜோங் அன் பாராட்டினார். வடகொரியாவும் தென்கொரியாவும் 66 ஆண்டுகளாக கடும் ராணுவ மோதல்களில் ஈடுபட்ட எல்லைப் பகுதியில்தான் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இந்தச் சந்திப்பு சிறியதாகவே அமைந்தது. இதில் எவ்வித அரசு சார்ந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. எனினும், முடங்கியிருந்த அணு ஆயுதப் பேச்சுவார்த்தைகள் இந்தச் சந்திப்பால் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறிது நேரத்தில் ட்ரம்பும், கிம் ஜோங்கும் தென்கொரிய பக்கம் நுழைந்து தென்கொரிய அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மூன்று தலைவர்களும் இவ்வாறு சந்தித்தது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. நீண்டகாலமாக நடைபெற்று வரும் அணு ஆயுத விவகாரத்தில் ஒரு தீர்மானத்தைக் கொண்டுவர டொனால்டு ட்ரம்ப் தீவிரமாக முயற்சி செய்து வருகிறார். டொனால்டு ட்ரம்ப் வடகொரிய தலைநகர் பியோங்யாங்குக்கு வந்தால் பெருமையாக இருக்கும் என்று கிம் தெரிவித்துள்ளார். அதற்கு, எல்லைக்குள் நுழைந்ததே பெருமையாக இருக்கிறது என்று ட்ரம்ப் பதிலளித்தார். மேலும், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் ஸ்டிபானி கிரிஷாமிடம் வடகொரிய பாதுகாப்பு அதிகாரிகள் கடுமையாக நடந்துகொண்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இரு தலைவர்களும் சந்தித்துக் கைகுலுக்கிக்கொண்டபோது செய்தியாளர்கள் அவர்களை நெருங்க முயற்சி செய்தனர். அப்போது அவர்களைப் பாதுகாப்பு அதிகாரிகள் தடுக்க முயற்சி செய்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது ஸ்டிபானி கிரிஷாமிடம் வடகொரிய அதிகாரிகள் கடுமையாக நடந்துகொண்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.