சினம்கொள் திரைப்படம் - தமிழீழ தாயகத்தின் சமகாலத்தின் வெளிப்பாடு!!

ஈழத்தமிழ் இயக்குனர் ஒருவரின் படைப்பில் உருவான தமிழீழ போராட்டக்காவியம் இது.


தர்மத்தின் வழியிலான எந்த விடுதலைப் போராட்டங்கள் ஒரு நாள் வெல்லும்; அது எவ்வாறெனில், ‘தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்’ என்ற கூற்றுப்படி எனலாம்.


ஒரு விடுதலைப் போராளியின் சுதந்திரவேட்கை என்பது எக்காலத்திலும் அது ஓயந்துவிடப்போவதில்லை.
அந்த வீரவேட்கையானது எந்தநேரத்திலும் அவர்களை மீண்டும் சினம்கொள்ளவைக்கும் என்பதே இதன் கருக்களமாக அமைந்துள்ளது.

எமது ஈழவிடுதலைப் போராட்டம் மௌனிக்கப்பட்டு 10 வருடங்களாகவிட்ட இந்தக்காலகட்டத்தில், இந்த முழு நீளக்காவியமானது, மீண்டும் அந்த, எமக்கான - தரைப்படை மற்றும் கடற்படை என்பவற்றை ஒருசேர வலுச்சேர்த்துப்படைக்கப்பட்டது போல் அமைந்துள்ளது. அதே நினைவுகளை கண்களில் வரவழைத்தது என்றால் மிகையில்லை.

எமது ஆயுத போராட்ட இறுதி மையமான முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைத்துள்ள ‘வற்றாப்பளை அம்மன்’ ஆலயத்தில், வரலாறுகள் பல படைத்த எமக்கான அந்த ஆயத போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர், இன்றும் அவ்வாலயத்தில், சுதந்திரவேட்கை மாறாமலேயே கையில் வானொலிக்கருவியை (walkie-talkie) வைத்திருப்பது போல் அங்கும் இங்கும் ஓடித்திரியக்கூடிய முன்னாள் போராளி அண்ணா ஒருவரின் நிஜத்தை அவ்வாறே கதைக்களத்தின் ஆரம்பத்தில் சித்தரிப்பதன் மூலம், வரலாறுகள் படைத்தவர்கள் ஓயப்போவதில்லை என்றதோர் கருத்தை ஆணித்தரமாக ஆரம்பத்திலேயே வலுப்படுத்தியிருந்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில், யாழ்களநீரேரிக்கு அண்மையாக அமைந்துள்ள ‘கவுதாரிமுனை’ பல நேரங்களில் எமது போராட்ட உக்திகளுக்குக் கைகொடுத்தது என்பதை, எமது அமைப்புக்கே உரிய முறையில் வரைபடம் மூலம் விளங்க வைத்து, அந்தக் கடத்தல்க் கும்பலை, முன்னாள் போராளி அண்ணா எவ்வாறு கைது செய்யத் திட்டமிட்டார் என்பது மிகவும் தத்ரூபமான முறையில் காட்சிப்படுத்தியுள்ளமையானது மீண்டும் எமது வீரர்களை கண்முன்னே நினைவுபடுத்துகின்றது.

காலங்கள் கடந்தாலும், நாம் இலக்கு நோக்கி ஓடுவதற்கு என்றும் ஒயப்போவதில்லை என்பதை ஈழத்தமிழரின் அடுத்த தலைமுறையினருக்கு உணர்த்தும் அரிய படிப்பினை ஒன்றை அந்தப் போராளி அண்ணா (முன்னாள் போராளி அண்ணா அல்ல அவர்கள் இன்றும் போராளிகள் தான்) கூறும் போது - புதியதோர் நம்பிக்கையை - கண்களில் நீர்வடிந்தபோதும், மனம் உருவாக்கிக்கொண்டது.

எமது அறவழியிலான விடுதலைப்போராட்டமானது, எமது தேசியத் தலைவரின் பாதையில் மூன்று சகாப்தங்களுக்கு மேலாக வழிநடத்தப்பட்டு, 2009 ஆம் ஆண்டு மௌனிக்கப்படும் வரையில், பல கட்டமைப்புக்களை உருவாக்கிவிட்டிருந்து.
அதில் முக்கியமாக, புலம்பெயர் தேசத்தில் வாழும் தமிழ்மக்களின் உதவியுடனான, எமது தேசியத்தலைவரால் உருவாக்கப்பட்ட தமிழ் அரசியல் அமைப்புகளைக் குறிப்பிடலாம்.

அவ்வமைப்புக்கள் தமது வரலாற்றுப்பொறுப்பை உணர்ந்து செயற்படவேண்டிய இன்றைய காலகட்டத்தில் தேவை மிகையாக உள்ளது. அவற்றுள் குறிப்பாக, புலம்பெயர் தேசத்தில் பணபலத்தை உருவாக்கி, தாயகத்தில் இருக்கும் எமது இனத்தின் இருப்பையும் அதன் வரலாற்றுத்தடயங்களையும் பாதுகாக்க வேண்டிய தார்மீகப்பொறுப்பு ஒன்று, புலம்பெயர் தமிழ்மக்களின் உதவியுடன் அவ்வமைப்புக்களின் தலைகளின் மேல் சுமத்தப்பட்டுள்ளது என்ற உண்மையை, ‘யாழினி’ என்ற போராளி அக்காவின் கதாபாத்திரத்தில், அவரின் புற்றுநோயைக் குணமாக்கப் பணவுதவி தேவைப்படுகின்றது என்றமைந்த காட்சியில் திடமாகக் காண்பிக்கப்பட்டுள்ளது.
அந்தக்கடமைகளில் இருந்து தவறும் அமைப்புக்களும் மனிதர்களும், இயற்கையாகவே தர்மத்தின் பிடிக்குள் சிக்குப்படத் தவறுவதில்லை என்பதையும் அந்த ‘சொர்ணலிங்கம்’ என்ற கதாபாத்திரத்துடைய மகளின் கடத்தல்ச் சம்பவம் எடுத்துக்காட்டுவதாகவே உள்ளது.

திட்டமிட்ட கட்டமைக்கப்பட இனவழிப்பானது, சிங்கள பௌத்த பேரினவாதத்தால் எப்படித் தாயகத்தில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது என்பதை, புனர்வாழ்வின் போது நஞ்சூட்டப்பட்டபின் விடுதலை செய்யப்பட்ட பல போராளிகளின் மர்மமான மரணங்கள் மூலம் தெளிவாக விளங்கக்கூடியதாக உள்ளதையும் பிரதிபலித்துக்காட்டியுள்ளது.

எந்தச் சந்தர்ப்பத்திலும், எமது ஈழ விடுதலைப் போராட்ட வீரர்கள், தமது தலைகளின் மேல் வரிந்துகொண்ட தமக்கான உயரிய ஒழுக்க நெறியில் இருந்து தவறியதுமில்லை தவறிவிடப்போவதுமில்லை என்பதையும் அந்தப் போராளி அண்ணா ‘அமுதனினால்’ ‘சொர்ணலிங்கம்’ என்பவருக்கு வழங்கப்பட்ட
உறுதிமொழிகளில் இருந்து சிறப்பாக விவரணப்படுத்தப்பட்டுள்ளது.

எமது அடுத்த எதிர்கால சந்ததியானது தாயகத்திலும் புலத்திலும் எவ்வாறு எமது இனத்தின் ஈழவிடுதலையை தமது வாழ்க்கைக்கூடாக முன்நகர்த்த வேண்டும் என்பதற்கு, அந்தப் போராளிக் கதாபாத்திரமான ‘அமுதன்’ அண்ணா கடத்தல் குழுவில் இருந்த ஒருவருக்குக் கூறிய அறிவுரைகள், காலத்தின் தேவையானவையாகவும் அத்துடன் புதிய உரமூட்டுபவையாகவும் இருக்கின்றது.
எமது தாயக இளையோர் ஒரே பாதையில், அனைத்தையும் கடந்து நகரவேண்டும் என்பதே, இன்றைய காலத்தில், எமது தாயகத்தைப் பாதுகாக்கத் தேவையான மிக முக்கிய விடயமாகும் என்பதும் தெளிவாகின்றது.
திட்டமிட்ட கட்டமைக்கப்பட்ட இனவழிப்பின் ஓர் வடிவமான போதைப்பொருட்களின் திணிப்பும் இளையோரின் குழு மோதல்களும் எமது இனத்தை, இன்று தாயகத்தில் ஊடறுத்துத் தாக்கிக்கொண்டுள்ளது என்ற கவலையான விடயமும், இக்காவியத்தில் தேவையான முறையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

தடைகளைத் தகர்த்து தாயகத்திலும் புலத்திலும் ஓரே எண்ணம் உள்ள தமிழ் இன இளைய சமுதாயத்தை, சரியாகத் திட்டமிட்ட செயற்திட்டம் ஒன்றின் மூலம் வழிப்படுத்த வேண்டிய உயரிய பொறுப்பு அனைத்து தமிழ் அமைப்புக்களிடமும் மற்றும் தமிழ் மக்களிடமும் உண்டென்பதை வலுவாக நம்புவோம்.

சினம்கொள்வோம்!
ஏன் இன்னமும் அழிக்கப்படுகின்றோம் என்பதை எண்ணி!

தாயகத்திலும் புலத்திலும் சினங்கொள்பவர்களின் கரங்களை, அந்த அமுதன் அண்ணாவிற்கு உதவிய கிராம மக்கள் போல், வலுப்படுத்தத் தயாராவோம்.

இத்திரைப்படத்தை எமது தமிழ் மக்கள் எல்லோரும் புலத்திலும் தாயகத்திலும் நிச்சயம் கண்டு, மேலும் இவ்வாறான உணர்வுள்ள படைப்புக்கள் தயாரிக்கப்பட வழிசமைப்போம்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.