எழுவர் விடுதலை: தீர்ப்பு ஒத்திவைப்பு!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், தற்போது பரோலில் உள்ள நளினி தனது பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஆகஸ்ட் 20) மனுத் தாக்கல் செய்துள்ளார். இதற்கிடையே எழுவர் விடுதலை தொடர்பான வழக்கின் தீர்ப்பை நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.



முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஆண்கள் சிறையிலும், அவரது மனைவி நளினி பெண்கள் சிறையிலும் தண்டனை அனுபவித்து வருகின்றனர். 28 ஆண்டுக்கால சிறைத் தண்டனையிலிருந்து, தங்களை விடுதலை செய்ய வேண்டுமென குற்றம்சாட்டப்பட்ட 7 பேரும் சட்டப் போராட்டத்தைச் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் தனது மகள் திருமணத்திற்காக பரோல் கேட்டு நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அவருக்கு ஊடகத்துக்குப் பேட்டி அளிக்கக் கூடாது, அரசியல்வாதிகளைச் சந்திக்கக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் பரோல் வழங்கப்பட்டது.

கடந்த ஜூலை 25ஆம் தேதி காலை 9.40 மணியளவில் வேலூர் சிறையிலிருந்து நளினி ஒரு மாத பரோலில் வெளியே வந்தார். இந்த இடைப்பட்ட காலத்தில் மகள் திருமணம் தொடர்பான பணிகளைக் கவனித்து வந்தார். அவரது பரோல் காலம் 5 நாட்களில் முடிவடையவுள்ள நிலையில், தனது பரோலை நீட்டிக்கக் கோரி வேலூர் சிறைத் துறை டிஐஜியிடம் மனு கொடுத்தார். அவரது மனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யவுள்ளதாக அவரது வழக்கறிஞர் புகழேந்தி நேற்று தெரிவித்திருந்தார்.

அதன்படி இன்று (ஆகஸ்ட் 20) திருமண ஏற்பாடுகள் நிறைவடையாததால் மேலும் ஒரு மாதம் பரோலை நீட்டிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் இந்த மனு குறித்து தமிழக அரசு நாளை (ஆகஸ்ட் 21) பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று நளினி தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதில் மனுத் தாக்கல் செய்தது. அதில், 7 பேர் விடுதலை தொடர்பாகத் தமிழக அமைச்சரவையின் பரிந்துரை குறித்து ஆளுநரிடம் விளக்கம் கேட்கச் சட்டத்தில் இடமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து 7 பேரின் விடுதலை தொடர்பான வழக்கைத் தேதி குறிப்பிடாமல் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.