முதலமைச்சருக்கு அதிகாரம் இல்லை!!

முதலமைச்சருக்கு அதிகாரம் இல்லை என்று கூறுவது அறிவிலித்தனமாகும் என வட மாகாண அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘2013 செப்ரெம்பர் 21ஆம் திகதி நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட யாவரும் இலங்கை அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டம் 1987ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க மகாண சபைகள் சட்டம், மாகாண சபைகள் தேர்தல் சட்டம் போன்றவற்றைத் தெரிந்துகொண்டுதான் போட்டியிட்டனர்.


 இதன் அடிப்படையிலேயே 38 உறுப்பினர்களும் வடக்கு மாகாண சபைக்குத் தெரிவுசெய்யப்பட்டனர். இவர்களில் எவரும் தமக்கு இந்தச் சட்டங்கள் பற்றித் தெரியாது என்று கூறிவிடமுடியாது. 13ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் வலுவற்றது என்பது இப்பொழுதுதான் தெரியவந்தவிடயமல்ல. தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை இது பூர்த்திசெய்யவில்லை என்று ஏற்கனவே நாம் எல்லோருமே கூறியிருப்பது ஒரு பொதுவான விடயம். ஆனால் அமைச்சர்கள் நியமனம் தொடர்பான ஏற்பாடுகள் தெளிவானது. இதனைத் தெரிந்துகொண்டுதானே செயற்படவேண்டும். நீதிமன்றம் கூட அமைச்சரை முதலமைச்சர் நீக்கமுடியாது என்று கூறவில்லை.


அதனை சட்ட ஏற்பாட்டின் படி முறைப்படியாகச் செய்யலாம் என்றே கூறியுள்ளது. அரசியல் அமைப்பின் உறுப்புரை 154 ஊ (5) பின்வருமாறு கூறுகின்றது. ‘ஆளுநர் பிரதான அமைச்சரின் ஆலோசனையின் மீது அம்மாகாணத்துக்கென அமைக்கப்பட்ட மாகாண சபையின் உறுப்பினர்களில் இருந்து ஏனைய அமைச்சர்களை நியமித்தல் வேண்டும்’ இதற்கமைத்தானே முதலமைச்சர் சகல அமைச்சர்களின் நியமனங்களையும் ஆளுநருக்கு ஆலோசனை வழங்கி மேற்கொள்வித்தார்.


டெனீஸ்வரன் தவிர்ந்த ஏனைய அமைச்சர்களின் பதவி நீக்கம் அல்லது பதவி விலகல் தொடர்பாகவும் ஆளுநருக்கு ஆலோசனை வழங்கியே மேற்கொள்ளப்பட்டன. அப்பொழுதெல்லாம் அமைச்சர்களை நியமிக்க அல்லது நீக்க முதலமைச்சருக்கு அதிகாரம் இல்லை என்று தெரியவில்லையா என்ற கேள்வி இயல்பாக எழுகிறதே. இந்த விடயத்தில் இந்திய அரசியல் அமைப்பின் உறுப்புரிமை 164 (i) அச்சொட்டாக இதேவார்த்தைகளையே கொண்டுள்ளது. அதாவது முதலமைச்சரின் ஆலோசனையின் பெயரிலேயே அமைச்சர்களை நியமிக்கலாம் என்ற ஏற்பாடு ஆண்டாண்டு காலமாக இந்தியாவில் நடைமுறையில் உள்ளது.


அதுவே இந்த நாட்டின் அரசமைப்பிலும் உள்ளது. மாகாண சபைகள் சட்டம் தொடர்பாகப் பேசுபவர்களும் எழுதுபவர்களும் இந்தக் கட்டமைப்பு பற்றிய சட்ட ஏற்பாடுகள் மிகப்பெரும்பாலானவை இந்திய அரசமைப்பின் மீள்பதிப்பாகவே இருப்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். இரு நாட்டுச் சட்டங்களின் படியும் ஆளுநரை ஜனாதிபதி நியமிக்கிறார். ஆளுநர் முதலமைச்சரை நியமிக்கிறார். அமைச்சர்களை முதலமைச்சரின் ஆலோசனையின் பேரில் ஆளுநர் நியமிக்கிறார். அமைச்சர்களின் நியமனம் தொடர்பாக அது இருதரப்பு இணைந்த செயற்பாடு என்பதை சபைக் கூட்டங்களிலே நான் தெளிவுபடுத்தியிருக்கின்றேன்.


 நியமன அதிகாரம் ஆளுநருக்கே உண்டு. ஆனால் அவர் அதனைச் தன்னிச்சையாகச் செய்யமுடியாது. முதலமைச்சரின் ஆலோசனையின் பெயரிலேயே நியமிக்க முடியும். நியமன அதிகாரத்துக்கும் ஆலோசனை அதிகாரத்துக்கும் உள்ள வேறுபாடு தெளிவானது. ஆலோசனை வழங்கும் அதிகாரம் முதலமைச்சருக்கே உண்டு.


அதன்படி முன்வைக்கும் ஆலோசனையை ஆளுநர் ஒரு முறை மீள்பரிசீலனைக்கு அனுப்பலாம். ஆனால் அதையே முதலமைச்சர் மீண்டும் வலியுறுத்தினால் ஆளுநர் முதலமைச்சரின் ஆலோசனையின் படி செயற்படுவது கட்டாயமானது என்பது இந்திய நீதிமன்றங்களின் தீர்ப்புக்களில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆகவே முதலமைச்சருக்கு அதிகாரம் இல்லை என்று கூறுவது அறிவிலித்தனமாகும்’ என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.