பேனர் வைத்தால்தான் விருந்தினர்கள் வருவார்களா!

எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பேனர் வைப்பது தொடர்வதாகச் சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.


பள்ளிக்கரணை அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயபால் இல்ல திருமண விழா பேனர் விழுந்ததில் விபத்து ஏற்பட்டு சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த சுபஸ்ரீ உயிரிழந்தார். அவரது மரணத்துக்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது. இதற்கிடையே விபத்து ஏற்பட்ட விவகாரத்தில், சம்பந்தப்பட்ட லாரி ஓட்டுநர் மனோஜை போலீசார் கைது செய்தனர். 


தொடர்ந்து பேனரை வைத்த முன்னாள் கவுன்சிலர் ஜெயபால் மீது பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், பேனரை அச்சடித்த அச்சகத்தைக் கண்டுபிடித்து சீல் வைக்கப்படும். அதன் உரிமம் ரத்து செய்யப்படும் என்று தெரிவித்திருந்தார்.அதன்படி பேனரை அச்சடித்த அச்சகத்துக்கும் மாநகராட்சி அதிகாரிகள் இன்று சீல் வைத்தனர்.
உடற்கூறாய்வுக்காக குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட சுபஸ்ரீயின் உடல் பிரேதப் பரிசோதனை முடிவடைந்து இன்று காலை பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இன்று மாலை அவரது உடல் தகனம் செய்யப்படும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். குடும்பத்துக்கு ஒரே பெண் என்பதால் சுபஸ்ரீயின் குடும்பத்தினர் மிகுந்த வேதனை அடைந்திருக்கின்றனர்.

இதற்கிடையில் விதிமீறி பேனர்கள் வைப்பது தொடர்பான வழக்கை விசாரிக்கும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சத்யநாராயணன், சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வு ,சுபஸ்ரீ மீது பேனர் விழுந்து விபத்துக்குள்ளானதில் அப்பெண் மரணம் அடைந்தது குறித்து தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
அப்போது நீதிபதிகள், எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் விதி மீறி பேனர் வைப்பது தொடர்கிறது. உயிரிழப்புக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு தந்தால் போதும் என்று நினைக்கின்றனர். இதுவே இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணம்.. பள்ளிக்கரணையில் இளம்பெண் உயிரிழப்புக்கு அதிகாரிகளின் மெத்தனப் போக்கே காரணம். சுபஸ்ரீயின் இத்தனை ஆண்டு வளர்ச்சிக்கு அவரது பெற்றோர் மட்டுமல்ல, சமூகத்தின் பங்கும் இருக்கிறது. பொதுமக்களின் உயிருக்கு ஒரு சதவிகித மதிப்பு கூட இல்லை. அரசியல் கட்சியினரின் குடும்ப நிகழ்ச்சிகளுக்குப் பேனர்கள் வைத்தால் தான் விருந்தினர்கள் வருவார்களா? என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி கண்டனம் தெரிவித்தனர்
மேலும், பேனர் விவகாரத்தில் இன்னும் எத்தனை உயிர்கள் பலியாக போகின்றன. இன்னும் எத்தனை லிட்டர் ரத்தம் சிந்தவேண்டும். மெரினா கடற்கரைச் சாலையில் நடைபாதையைச் சேதப்படுத்தி பேனர்கள் வைக்க அனுமதி வழங்கியது யார்?அங்கு வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கட்சிகளின் பேனர்களைஉடனடியாக நீக்க வேண்டும். குற்றம் நடக்க அனுமதித்துவிட்டு, பின்னர் குற்றவாளிகள் பின்னால் ஓடுவதையே அரசு வாடிக்கையாக வைத்துள்ளது. விதிகளை மீறி பேனர் வைக்க கூடாது என முதல்வர் அறிக்கை விடலாமே? என்று கேள்வி எழுப்பினர்.
இன்று பிற்பகல் 2.15 மணிக்கு சட்டவிரோத பேனர் வைக்கப்படுவது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.