சுபஸ்ரீ வழக்கில் நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்வி!

சென்னை பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து ஏற்பட்ட விபத்தில் குரோம்பேட்டையை சேர்ந்த ரவி மகள் சுபஸ்ரீ உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்த சென்னை உயர் நீதிமன்றம், அரசுக்கும் மாநகராட்சி அதிகாரிகளுக்கும் , அரசியல் கட்சிகளுக்கும், காவல்துறையினருக்கும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.


இன்று காலை சுபஸ்ரீ மரணம் தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆஜராக உத்தரவிட்டு வழக்கைப் பிற்பகல் 2.15 மணிக்கு ஒத்திவைத்தது. மீண்டும் பிற்பகல் விசாரணைக்கு வந்த போது சென்னை மாநகராட்சி மண்டல துணை ஆணையர் ஆல்பி வர்கீஸ், பரங்கிமலை துணை ஆணையர் பிரபாகர், பள்ளிக்கரணை காவல் உதவி ஆணையர் சவுரிநாதன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
அப்போது நீதிபதிகள் கடுமையான கேள்விகளை முன்வைத்தனர். முதலில் இவ்வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்று நீதிபதிகள் சத்யநாராயணன், சேஷசாயி ஆகியோர் கேள்வி எழுப்பினர். அதற்குப் பெண்ணின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் லாரி ஓட்டுநர் மனோஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சட்டவிரோத பேனருக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தமிழகத்தில் காது குத்து, கடா வெட்டு, கல்யாணம் என அனைத்துக்கும் பேனர்கள் வைக்கப்படுகிறது. விவாகரத்துக்கு மட்டும்தான் இன்னும் பேனர்கள் வைக்கவில்லை. பேனர்கள் வைத்தால்தான் விழாவுக்கு வர அமைச்சர்களுக்கு வழி தெரியுமா? பேனர்கள் வைக்காவிட்டால் அவர்களுக்கு வழி தெரியாமல் போய்விடுமா? இல்லை அவர்கள் தொலைந்துபோய் விடுவார்களா? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.
எதாவது நல்ல காரியம் நடக்க வேண்டும் என்றால் காவு கொடுக்க வேண்டும் என்பதை இன்னும் சிலர் நம்பிக்கொண்டிருக்கின்றனர். உயிர்ப்பலி கொடுத்தால் தான் நிர்வாகம் செயல்படுமா? என்றும் கேள்வி எழுப்பினர். முன்னதாக மெரினா கடற்கரைச் சாலையில் வைக்கப்பட்டிருக்கும் பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது இதனைத் தொடர்ந்து இன்று மதியம் அங்குள்ள பேனர்கள் வெகு விரைவாக அகற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த வழக்கு விசாரணையின் போது அரசியல் கட்சிகள் இனி பேனர்கள் வைக்கமாட்டோம் என்று உத்தரவாதம் கொடுக்க வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், இவ்வழக்கில் காவல்துறை குறிப்பேட்டில் பேனர் வைக்கப்பட்டது குறித்து ஒருவரி கூட இல்லையே என்று கேள்வி எழுப்பினர். அதற்குக் காவல் ஆய்வாளர் சவுரிநாதன், விபத்து நடந்த பகுதியில் நான்கு பேனர்கள் இருந்தன. குறிப்பேட்டில் எழுத மறந்துவிட்டேன் என்று தெரிவித்திருக்கிறார்.
அப்போது அனுமதி இல்லாமல் பேனர் வைத்திருப்பது தெரிந்து ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், பேனர் வைத்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? மதியம் 2 மணியளவில் நடந்த விபத்துக்கு மாலை 6 மணியளவில் தாமதமாக வழக்குப்பதிவு செய்தது ஏன்? 18ஆண்டுகளாக காவல்துறையில் இருக்கும் ஒரு ஆய்வாளர் வழக்குப்பதிவு செய்ய இவ்வளவு நேரம் எடுத்தது சரியா? பேனரிலிருந்த கலர் உங்களை நடவடிக்கை எடுக்க விடாமல் தடுத்ததா? என்றும் வினவினர்.
பேனர் வைக்க வேண்டாம் என்று அறிக்கை விடும் அரசியல் கட்சிகள் இந்த முடிவை முன்பே எடுத்திருந்தால் எந்த உயிர்ப் பலியும் ஏற்பட்டிருக்காது என்று வேதனை தெரிவித்த நீதிபதிகள், சென்னை முழுவதும் வைக்கப்படும் சிசிடிவி மூலம் சட்டவிரோதமாகப் பேனர்கள் வைப்பதை தடுக்க முடியுமா? சிசிடிவிகள் மூலம் இதுபோன்ற விதிமுறைகளைக் கண்டறிய முடியுமா? என்றும் கேட்டனர்.
விதிமீறலைத் தடுக்காத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதைத் தலைமைச் செயலாளர் கண்காணித்து, அதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணையைச் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இழப்பீடு
பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு எவ்வளவு நிவாரணம் வழங்கப்போகிறீர்கள் என்று அரசுத் தரப்புக்குக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இடைக்கால நிவாரணமாக ரூ.5 லட்சத்தை முதலில் சுபஸ்ரீ குடும்பத்துக்குக் கொடுக்க வேண்டும். பின்னர் அந்த தொகையை, தவறிழைத்த அதிகாரிகளின் ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்துகொள்ள வேண்டும். பேனர் வைத்தவர்களிடமும் இழப்பீட்டுத் தொகையை வசூலிக்க வேண்டும் என்றும் ஆணையிட்டனர்.
இந்த வழக்கைச் சென்னை உயர் நீதிமன்றம் தொடர்ந்து கண்காணிக்கும் என்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகளும், காவல்துறையினரும் கடைமையைச் செய்யத் தவறியுள்ளனர் என்றும் சுட்டிக்காட்டினர், மேலும் இந்த வழக்கு விசாரணை செப்டம்பர் 25ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Powered by Blogger.