பிகில் சென்சார் சர்ச்சை: மும்பைக்குப் பறந்த அதிகாரி!

விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படம் படப்பிடிப்பு தொடங்கிய அன்றே தீபாவளி வெளியீடு என்று அறிவிக்கப்பட்டது. படத்தின் முதல் பிரதியை 140 கோடி ரூபாய்க்குள் எடுத்து முடிக்க வேண்டுமென்று இயக்குனர் அட்லீயுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் தயாரிப்பு தரப்பில் போடப்பட்டது. இதன் தமிழக உரிமை 71 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. பிகில் படத்துடன் வேறு எந்த முன்னணி நடிகருடைய படமும் போட்டிக்கு வராது என்கிற நம்பிக்கையின் அடிப்படையில் தமிழக விநியோக உரிமை எப்போதுமில்லாத வகையில் அதிக விலைக்கு வாங்கப்பட்டது. ஆனால், சூழல் மாறியது.

தீபாவளி பண்டிகை அன்று கார்த்தி நடித்துள்ள கைதி, விஜய் சேதுபதி நடிப்பில் சங்கத்தமிழன் ஆகிய இரண்டு படங்களும் தணிக்கை முடிந்து பிகில் படத்துடன் போட்டியிட தயாராக உள்ளது. பிகில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசிய அரசியல் சம்பந்தமான சர்ச்சை பேச்சில் ஆளுங்கட்சி கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இதனால் திட்டமிட்டபடி தீபாவளியன்று இப்படம் வெளியாவதில் சிரமங்கள் ஏற்படத் தொடங்கின. தணிக்கைக்கு படத்தை விண்ணப்பிக்கும்போது படம் பார்ப்பதை தாமதப்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனை மத்தியஅரசு தலையிட்டால் மட்டுமே செய்ய முடியும் என்பதால், தமிழக அரசிடமிருந்து டெல்லி வரை பேசப்பட்டது.
மத்திய, மாநில அரசுகளின் கவனம் முழுமையும் மாமல்லபுரத்திற்கு வருகை தரும் இந்திய பிரதமர் மற்றும் சீன அதிபர் ஆகியோரை வரவேற்கும் பணிகளில் உள்ளது. இந்த சூழலில் நேற்றைய தினம் பிகில் படம் தணிக்கை சான்றிதழ் பெறுவதற்காக விண்ணப்பிக்கப்பட்டது. தணிக்கைத் துறையின் சென்னை மண்டல அதிகாரி தனது பணிகளில் நேரம் தவறாமை, நேர்மையை கடைப்பிடிப்பவர் என்ற பெருமைக்குறியவர். அதனால் பிகில் திரைப்படத்துக்கு சட்டப்படி தணிக்கை சான்றிதழ் பெறுவதில் இடையூறு, கால தாமதம் எதுவும் இருக்காது என்று தயாரிப்பு தரப்புக்கு ஆறுதல் வார்த்தைகள் கிடைத்தன. எனவே, சென்சார் பிரச்சினையை பிகில் தாண்டிவிடக்கூடிய சூழல் இருப்பதாக நம்பப்பட்டது. ஆனால், அந்த நம்பிக்கையை சிதறடிக்க சீக்கிரமே கிடைத்தது ஒரு தகவல்.
நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அக்டோபர் 21 அன்று நடைபெற இருப்பதால், அதுவரை பிகில் படம் சம்பந்தமான சர்ச்சைகள் எதையும் ஏற்படுத்த கூடாது என்று ஆளுங்கட்சி தரப்புக்கு அறிவுறுத்தப்பட்டது. விஜய்யை கட்டுப்படுத்துவதாக நினைத்து செய்யக்கூடிய எந்த வேலையும், விஜய்யின் ரசிகர்களை சீண்டிவிடக்கூடாது என்பதிலும், அது தேர்தலில் எதிரொலிக்கக்கூடாது என்பதிலும் கவனமாக இருக்கின்றது தமிழக அரசு.
தணிக்கைச் சான்றிதழுக்கு விண்ணப்பித்த வேகத்தில் செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்களை தயாரிப்பு தரப்பில் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார்கள். ‘படத்தை எந்த சிக்கலும் ஏற்படாமல் திட்டமிட்டபடி வெளியிடுவதற்கு மாநில அரசு ஒத்துழைப்பு தரவேண்டும்’ என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
‘அதற்காக என்ன செய்ய வேண்டுமென்றாலும், நாங்கள் தயாராக இருக்கிறோம்’ என்ற உத்திரவாதம் தயாரிப்பு தரப்பில் கொடுக்கப்பட்டபோது, அமைச்சர் தரப்பிலிருந்து எந்தவிதமான உத்திரவாதமும் வழங்கப்படவில்லை. அதேவேளை இன்று மாலைக்குள் பிகில் படத்தின் தணிக்கை வேலைகள் முடிந்து உடனடியாக சான்றிதழ் பெறுவதற்கான முயற்சிகளும் போர்க்கால அடிப்படையில் தயாரிப்பு தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தீபாவளி பந்தயத்தில் பிகில் படத்தை திரையிட்டு வசூலை குவிக்கலாம் என்று கனவு கண்ட திரையரங்கு உரிமையாளர்கள் தற்போது படத்தை திரையிடுவதற்கு தயங்குகின்றனர். காரணம், தியேட்டர் டிக்கெட் புக் செய்வதை முழுவதுமாக ஆன்லைனுக்கு மாற்றும் முயற்சியிலிருந்து சமீபத்தில் தமிழக அரசு பின்வாங்கியது. இப்போது, அவர்களை எதிர்த்துப் பேசியவரின் படத்தை, அவர்கள் கண்ணசைவின்றி வெளியிட அவர்கள் விரும்பவில்லை.
எந்தவிதமான இடையூறுமின்றி பிகில் வெளிவந்தாலும் டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்க முடியாது. அரசின் கெடுபிடிகள் கடுமையாக இருக்கும் என்று வணிகவரித்துறை அதிகாரிகள் மூலம் திரையரங்கு உரிமையாளர்களுக்கு தகவல் கூறப்பட்டுள்ளது.
விஜய் நடிப்பில் வெளிவரும் படங்கள் திரையரங்குகளுக்கு எப்போதும் கற்பக விருட்சமாக வருமானத்தை வாரி வழங்கும். அதன்காரணமாக விஜய் படங்களை திரையிடுவதற்கு திரையரங்கு உரிமையாளர் இடையே கடும் போட்டி எப்போதும் இருக்கும். மெர்சல், சர்க்கார் இந்த இரண்டு படங்களும் எதிர்மறையான விமர்சனங்கள், கதை திருட்டு பஞ்சாயத்து, அரசின் எதிர்ப்பு என்று மும்முனைத் தாக்குதலுக்கு உள்ளாகி அந்த பரபரப்பில் வெற்றி பெற்றது. அதேபோன்றதொரு சூழல் பிகில் திரைப்படத்திற்கு தற்போது உருவாகியுள்ளது. முந்தைய படங்களைப் போன்ற பிரச்சனைகள் பிகில் படத்துக்கு இல்லை. ஆனால் சர்வ வல்லமை பொருந்திய அதிகாரவர்க்கத்தின் பெரும் கோபத்திற்கு அந்தப் படம் உள்ளாகியிருக்கிறது.
சரி, மற்ற பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முன்பு சென்சாரைத் தாண்டவேண்டுமல்லவா?
திரையுலகினரின் கணிப்புப்படி சென்சார் பிரச்சினை வராது என்று அனைவரும் நினைத்தனர். தமிழ் திரைப்படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் கொடுக்கவேண்டிய அதிகாரிகள், இன்று மாலை பிகில் திரைப்படத்தைப் பார்ப்பதாக திட்டமிடப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் தமிழக தலைமை தணிக்கை அதிகாரி மும்பையிலுள்ள தணிக்கைத் துறையின் தலைமை அலுவலகத்துக்கு அழைக்கப்பட்டிருக்கிறார். எனவே, இங்கு மீதமிருந்த அத்தனை வேலைகளையும் அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு, அவர்கள் மும்பைக்குப் பறந்துவிட பிகில் திரைப்படம் சென்சாருக்காக ஹார்ட் டிஸ்குக்குள் காத்திருக்கிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.