நீட் ஆள்மாறாட்டம்: மாணவி கைது!

நீட் ஆள்மாறாட்ட விவகாரம் தொடர்பாக சென்னையைச் சேர்ந்த மாணவி கைது செய்யப்பட்டுள்ளார்.
தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் படித்துவந்த மாணவர் உதித் சூர்யா, நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற்றது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அவரும், அவரது தந்தையும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். உதித் சூர்யா போலவே ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட பிரவீன், சரவணன், இர்பான் ஆகிய மூன்று மாணவர்களும் கைது செய்யப்பட்டனர்.
மாணவியிடம் விசாரணை
இதனையடுத்து, தமிழகம் முழுவதும் அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. இந்த விவகாரம் சிபிசிஐடி போலீஸுக்கு மாற்றப்பட்டது. இதற்கிடையே, உதித் சூர்யாவிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், மாணவி ஒருவரை சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள சவீதா மருத்துவக் கல்லூரியில் படித்துவந்த மாணவி பிரியங்கா, அவரது தாயார் மைனாவதி ஆகியோரிடம் தேனி சமதர்மபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது.
மாணவி, தாயார் கைது
விசாரணை முடிந்த நிலையில் ஆள்மாறாட்டம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து மாணவியையும், அவரது தாயாரையும் இன்று (அக்டோபர் 12) சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது ஆள்மாறாட்டம், சதித் திட்டம் தீட்டுதல், போலி ஆவணங்கள் தயாரித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவரையும் தேனி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளனர்.
Powered by Blogger.