தமிழீழ கடற்படைத் தளபதி சூசையின் பிறந்த நாள்.!

எண்ணெய்க்கு அடுத்ததாக உலக அரசியல் நடக்கும் பகுதி கடல்தான்.

நாம் வாழும் பூமிப்பந்து முக்கால் பங்கு நீரால் சூழப்பட்டதுதான்.

எண்ணெய்க்கான புவிசார் அரசியல் ஓய்ந்து தண்ணீர் (கடல்) அரசியலுக்குள் நவீன உலகம் பிரவேசித்திருக்கிறது.

மூன்று பக்கமும் நீரால் சூழப்பட்ட தமிழீழத்தின் சூழமைவு,கேந்திர முக்கியத்துவம், அரசியல் எல்லாமுமே தண்ணீர்தான்.

இன்னொரு தமிழர் நிலமான தமிழகத்தை தமிழீழத்தோடு இணைப்பது கூட அதே தண்ணீர்தான்.

இந்த உளவியல், அரசியல், விஞ்ஞானம்,இயங்கியல் எல்லாவற்றினதும் கூட்டியக்கமாகவே தலைவர் பிரபாகரன் 'நந்திக்கடல்'நோக்கி நடந்தார்.

மூன்று புறமும் கடலால் சூழப்பட்ட தமிழீழத்திற்குரிய பிராந்திய முக்கியத்துவம் ஒரு பக்க கடலை கொண்ட சிறீலங்காவிற்கு இல்லை. பிராந்திய நலன்களை மையப்படுத்திய தமிழீழம் என்ற தேசத்தின் அரசியல் இருப்பு மையம் கொள்கிற இடம் இதுதான்.

அதுதான் தலைவர் ஏனைய கட்டமைப்புக்களை விட கடற்புலிகளை வளர்த்தெடுப்பதில் அதீத கவனம் செலுத்தினார். அதற்கேற்றாற்போல் இந்து சமுத்திர பிராந்தியத்தில் ஒரு கடல் அரணை உருவாக்கி தமது வலிமையை கடற்புலிகள் நிருபித்தார்கள்.

இந்த கடல் அரணும், தமிழீழ கடலின் கேந்திர முக்கியத்துவமுமே தமிழீழ நடைமுறை அரசை - அதாவது புலிகளை அழித்தொழிக்க வேண்டிய சக்திகளாக அமெரிக்கா போன்ற வல்லரசுகள் கருத மிக முக்கிய காரணமாகும்.

தெளிவான தூரநோக்கற்ற குறுகிய நலனை மையப்படுத்திய இந்திய கொள்கை வகுப்பாளர்களும் இதற்கு துணைபோனது துரதிஸ்டவசவமானது.

'புலிகளின் கடல் அரண்' உடைந்து போனதால் இந்து சமுத்திரப் பிராந்தியம் என்பது இந்தியாவிற்கு ஒரு இக்கட்டை உருவாக்கியிருக்கிறது.

இத்தகைய உலக ஒழுங்கின் போக்கையே மாற்றக்கூடிய - வல்லரசுகளையே அச்சுறுத்திய - தமிழர்களின் வீர மரபை மீடடெடுத்து அதை உலக அரங்கில் பேசுபொருளாக்கியது மட்டுமல்ல என்றைக்கும் புவிசார் நலனை தமிழீழக்கடலை மையப்படுத்தி தமிழர் நலனுக்கு சார்பாக திருப்பும் அரசியலை அடையாளம் காட்டிய பெருமை கடற்புலிகளையே சாரும்.

குறிப்பாக தமிழீழ அரசின் தலைமை வழி நின்று கடற்புலிகளை வழிநடத்திய தளபதி சூசையின் வகிபாகம் வரலாற்றில் இந்த அர்த்தத்திலேயே அதன் இடத்தை தக்க வைக்கும்.

(மீள் பதிவு)

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.