மலேசிய இந்தியர்களின் எதிர்பார்ப்புகள்!!

அண்மைய காலங்களில் இரு வகையான வாதங்கள் உலகை உலுக்கிக் கொண்டு வருகின்றன. ஒன்று தீவிரவாதம். மற்றொன்று பயங்கரவாதம்.

தீவிரவாதம் என்பது ஒரு கொள்கையை வன்முறை மூலமாக நிலைநாட்டச் செய்வது. முற்றிப் போனால் அதுவே பயங்கரவாதம் என்று பெயர் எடுக்கிறது. இந்த இரண்டுமே தேவையற்ற மனிதப் பிடிவாதங்கள்.

ஒரு நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்குத் தீவிரவாதம் அல்லது பயங்கரவாதம் மூலமாக மிரட்டல்கள் வரலாம். அப்படி வந்தால் கண்டிப்பாக அதை எதிர்த்துப் போராட வேண்டியது அவசியம்.

இருந்தாலும்  அந்தப் போராட்டத்தில் ஒரு  சமநிலை இருக்க வேண்டும். அதாவது ஒரு சமச் சீர் இருக்க வேண்டும். எப்படி என்று கேட்கிறீர்களா?

அரசியலமைப்பு உரிமைகள்; அடிப்படை மனித உரிமைகள் எனும் இந்த இரண்டு உரிமைகளும் மீறப் படாமல்... ஒரு சமநிலையில் அந்தத் தேசியப் பாதுகாப்புப்  போராட்டம் இருக்க வேண்டும்.

நீதிக் கொள்கைகள் என்பது இயற்கையாகவே அமைந்துவிட்ட மனிதக் கொள்கைகள். மனிதம் பேசும் மனசாட்சிக் கொள்கைகள்.

என்னதான் வந்தாலும் போனாலும் அந்த இயற்கையின் நீதி நியாயமானக் கொள்கைகள் நிலை நாட்டப்பட வேண்டும். அதே சமயத்தில் மனித உரிமைகளும் மதிக்கப்பட வேண்டும். மனித உரிமைகள் என்றைக்கும் மீறப்படக் கூடாது. சரி.

அரசியலமைப்பு உரிமைகள்; அடிப்படை மனித உரிமைகள்.  இந்த இரண்டு உரிமைகளும் நிலை நாட்டப் படுவதில் பாரபட்சம் இருக்கக் கூடாது.

அது மட்டும் அல்ல. அந்தப் பாரபட்சம் இல்லாமை, காலா காலத்திற்கும் நீடிக்கப்பட வேண்டும். அதாவது அரசு நிர்வாக அதிகாரிகளும் சரி; காவல் துறை அதிகாரிகளும் சரி; இரு தரப்பும் இணைந்து சேவை செய்ய வேண்டும்.

சோஸ்மா தெரியும் தானே. கடுமையான தடுப்புக் காவல் சட்டம். பலரும் எதிர்த்துப் போராடும் சட்டம்.

பக்காத்தான் அரசாங்கத்தைப் பொருத்த வரையில், அந்தச் சோஸ்மா சட்டம் என்பது மேலே சொல்லப்பட்ட அந்தச் சமநிலைக்குச் சாதகமாக அமையவில்லை என்பதே நம்முடைய கருத்து. மன்னிக்கவும்.

2012-ஆம் ஆண்டில் இந்தச் சோஸ்மா நடைமுறைக்கு வந்தது. அதில் இருந்து நூற்றுக் கணக்கான பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். கால வரையறை இல்லாமல் தடுத்து வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இதற்கு முன்னர் ஐ.எஸ்.ஏ. எனும் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் (Internal Security Act, Malaysia) அமலில் இருந்தது. 1957-ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்த பின்னர், அந்த உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் இயற்றப் பட்டது.

1960 ஜுன் 20-ஆம் தேதி, உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம்  எனும் பெயரில் சட்டமாக அங்கீகரிக்கப் பட்டது. 1972 ஆகஸ்டு 1-ஆம் தேதி திருத்தப் பட்டது. அதையும் நினைவில் கொள்வோம்.

(Act No. 18 of 1960) Revised: 1972 (Act 82 w.e.f. 1 August 1972)

2005-ஆம் ஆண்டு புள்ளி விவரங்களின்படி, உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் 44 ஆண்டு கால வரலாற்றில் 10,662 பேர் கைது செய்யப் பட்டு இருக்கிறார்கள். இவர்களில் 4,139 பேர் தடுப்பு முகாம்களில் சிறை வைக்கப் பட்டு இருக்கிறார்கள்.  2,066 பேர் இடம் கடத்தப் பட்டு இருக்கிறார்கள்.

தவிர 1984 - 1993-ஆம் ஆண்டுகளில் (பத்தாண்டுகள்) அந்தச் சட்டத்தி கீழ் 12 பேர் தூக்கிலிடப்பட்டு இருக்கிறார்கள்.

அந்த உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்திற்குப் பதிலாகத் தான் சோஸ்மா சட்டம் நடைமுறைக்கு வந்தது.

சோஸ்மா சட்டத்தை அறிமுகம் செய்தவர் பிரதமர் நஜீப். 2012 ஜுன் 22-ஆம் தேதி சட்டமாகப் பிரகடனம் செய்யப் பட்டது. மரண தண்டனை வழங்குவதற்கும் சோஸ்மா சட்டம் அனுமதி அளிக்கிறது.

இப்போதைய பக்காத்தான் அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர்... ஆட்சிக்கு வந்தால் அந்தச் சோஸ்மா சட்டம் அகற்றப்படும் என்று வாக்குறுதி அளிக்கப் பட்டது. சொன்னது சொன்னது தான். இருப்பினும்  மக்களுக்கு எதிராக இன்றும் சோஸ்மா பயன்படுத்தப் படுகிறது.

Thus far, as reported, more than 2,000 people have been detained under the Security Offences (Special Measures) Act 2012 (Sosma), 475 under the Prevention of Crime (Amendment) Act 2015 (Poca) and nine under the Prevention of Terrorism Act (Pota) in the country.

சான்று: https://www.freemalaysiatoday.com/category/opinion/2019/01/04/retaining-preventive-laws-still-the-best-option/

மலேசிய இந்தியர்களின் எதிர்பார்ப்புகள் இவைதான். அண்மையில் சோஸ்மாவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு இருக்கும் 12 பேரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.

அவர்கள் தவறு செய்து இருந்தால்... செய்ததற்கான சான்றுகள் இருந்தால்... அதன்படி அவர்களை மற்ற குற்றவியல் சட்டங்களின் கீழ் குற்றப் பதிவுகள் செய்ய வேண்டும்.

அது மட்டும் அல்ல. மற்றும் ஓர் எதிர்பார்ப்பு. விசாரணை இல்லாமல் தடுத்து வைக்க அனுமதி அளிக்கும் மற்ற மற்ற அனைத்துச் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும்.

சந்தேகத்தின் பேரில் அண்மையில் கைது செய்யப்பட்ட பன்னிருவரும் உடனடியாக ஒரு நீதிபதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். அவர்கள் மீது முறைப்படி குற்றப் பதிவு செய்யப்பட வேண்டும்.

ஒரு நியாயமான விசாரணை நடைபெற வேண்டும். குற்றம் நிரூபிக்கப்படும் வரை கைது செய்யப் பட்டவர்கள் அனைவரும் குற்றமற்றவர்கள் என்பதும் உறுதிப் படுத்தப்பட வேண்டும்.

அவையே மலேசிய இந்தியர்களின் அவசரமான எதிர்பார்ப்புகள். பக்காத்தான் அரசாங்கம் நிறைவேற்றுமா?

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
19.10.2019

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.