ஹரியானா: ஆட்சியமைக்க உரிமை கோரும் பாஜக!

ஹரியானா தேர்தல் முடிவுகள் தொங்கு சட்டமன்றத்தை நோக்கிச் செல்லும் நிலையிலிருக்க, மாநில முதல்வர் மனோகர் கட்டார் அரசாங்கத்தை அமைப்பதற்கான உரிமை கோருகிறார். ஹரியானா தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், இந்திய தேசிய லோக் தளம் ஆகிய கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. பாஜகவும் காங்கிரஸும் 90 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தின. இந்த தொகுதிகளில் இறுதியாக 1,169 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்திய தேசிய லோக் தளம் 81 தொகுதிகளிலும் மீதமுள்ள தொகுதிகளில் அதன் கூட்டணி கட்சியான அகாலி தளமும் போட்டியிட்டன. ஆம் ஆத்மி 46, பகுஜன் சமாஜ் 87, ஸ்வராஜ் இந்தியா 27 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தின. இந்நிலையில், இன்று காலை முதல் எண்ணப்பட்ட வாக்குகளில் பிஜேபி 39 தொகுதிகளிலும், காங்கிரஸ் 32 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. ஜனநாயக ஜனதா கட்சி 10 இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றன. தேர்தலுக்குப் பிறகான வாக்குக் கணிப்புகள் மனோகல் லால் கட்டார் தலைமையிலான பாஜக அரசு மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவித்தன. ஆனால், தற்போது நிலவியுள்ள பின்னடைவு காரணமாக தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொண்டு ஹரியானா பாஜக தலைவர் சுபாஷ் பராலா பதவி விலகி உள்ளார் என மதியம் செய்திகளில் வெளியாகின. ஆனால், இதனை பராலா முற்றிலுமாக மறுத்துள்ளார். இது குறித்து விளக்கமளித்த அவர், “தேர்தலில் பின்னடைவை சந்தித்ததை தொடர்ந்து கட்சியின் பாஜக மாநில தலைவர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்ததாக செய்திகள் வெளியானது உண்மைக்கு புறம்பானது. தொடர்ந்து கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து வருகிறேன். ராஜினாமா செய்ததாக கூறும் தகவல் பொய்யானது” என்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.