எடப்பாடியின் நடவடிக்கையில் மாற்றம்!
விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத் தேர்தல் வெற்றியைக் கொண்டாடும் விதமாகவும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டும் தமிழகம் முழுவதும் உள்ள அதிமுகவின் கிளைச் செயலாளர்கள், ஊராட்சிச் செயலாளர்கள் மற்றும் ஒன்றியச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு தீபாவளி பரிசாக ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்க மாவட்டச் செயலாளர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியிருந்தார்.
இதுதொடர்பாக அதிமுக நிர்வாகிகளுக்கு வேட்டி, சேலை, பணம் பரிசு! என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதன்படி, சில நாட்களாகவே அதிமுக மாவட்டச் செயலாளர்களும், அமைச்சர்களும் நிர்வாகிகளுக்கு பணம் வழங்கிவந்தனர்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் தீபாவளி பரிசுக்காக நேற்று காலை முதலே நிர்வாகிகள் காத்திருந்திருக்கிறார்கள். ஆனால், நேற்று மாலை வரை யாருக்கும் வழங்கப்படவில்லை. இரவு 9 மணிக்கு மேல்தான் முதல்வரிடமிருந்து உத்தரவு வந்திருக்கிறது. இதன்பிறகே வேட்டி, சேலை, தீபாவளி பரிசு மற்றும் நிர்வாகிகளின் பதவிக்கேற்ப கிளைச் செயலாளருக்கு ரூ.5 ஆயிரம், துணை அமைப்புகளின் நிர்வாகிகளுக்கு ரூ.3000-5000 என வழங்கப்பட்டிருக்கிறது. வராத நிர்வாகிகளை போனில் அழைத்து வாங்கிக்கொள்ளச் சொல்கிறார்களாம்.
அவர்கள் ஏன் வரவில்லை என்று அவர்களிடம் கேட்டால், எடப்பாடி மாறிவிட்டார். போன தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே அழைத்து பணம் கொடுத்தார். மரியாதையாக இருந்தது. இந்த வருடம் அதிகமாக பணம் கொடுத்தாலும் உரிய மரியாதை இல்லை. ஏகப்பட்ட மாற்றம் எடப்பாடியிடம் என்கின்றார்கள்.
பன்னீர் குழப்பம்
தேனியில் தீபாவளி பரிசை ரவீந்திரநாத் வழங்கிவிடுவார் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நினைக்க, அவரோ அப்பா தந்துவிடுவார் என்ற நினைப்பில் இருந்திருக்கிறார். இதனால், யார் அளிக்கிறார்கள் என்ற குழப்பம் நிர்வாகிகள் மத்தியில் நீடித்தது. அதன்பிறகு இருவரும் பேசி ஒன்றாகவே நிர்வாகிகளுக்கு தீபாவளிப் பரிசை வழங்கியிருக்கிறார்கள். 

கைவிரித்த கே.பி.அன்பழகன்
கடலூரைப் பொறுத்தவரை தொகுதி நிர்வாகிகளை மட்டுமே அமைச்சர் எம்.சி.சம்பத் கவனித்திருக்கிறார். தங்களை கண்டுகொள்ளவே இல்லை என்று அவர் மாவட்டச் செயலாளராக இருக்கும் பகுதியில் உள்ள நிர்வாகிகள், குமுறலில் உள்ளனர். தருமபுரியில் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்காக மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் அனைவரும் நேற்று காத்திருந்திருக்கிறார்கள். ஆனால், அவர்களை சந்தித்த அமைச்சர் இடைத் தேர்தலில் அதிகமாக செலவாகிவிட்டதாகவும், பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லியும் அனுப்பி வைத்திருக்கிறார்.
கருத்துகள் இல்லை