விஜய் சேதுபதியின் பட வியாபார நிலவரம்!
சங்கத்தமிழன் படத்தில் விஜய்சேதுபதி இரட்டை வேடங்களில் நடித்திருப்பதால் அவரது ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
தீபாவளி பண்டிகை அன்று விஜய் நடித்துள்ள பிகில், கார்த்தி நடித்துள்ள கைதி ஆகிய திரைப்படங்கள் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், சங்கத்தமிழன் தீபாவளி வெளியீடு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் கதாநாயகனாக நடிப்பதற்காக விஜய்சேதுபதிக்கு சுமார் 10 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதனால் இப்படத்தின் தமிழ்நாடு உரிமை 25 கோடி ரூபாய் என்று தயாரிப்பு தரப்பில் பேசப்பட்டது.
விஜய் சேதுபதி இதற்கு முன் நடித்த சீதக்காதி, சிந்துபாத் உள்ளிட்ட படங்கள் வசூல் ரீதியாக தோல்வியடைந்த நிலையில் சங்கத்தமிழன் படத்தை அதிக விலை கொடுத்து வாங்குவதற்கு விநியோகஸ்தர்கள் ஆர்வம் காட்டவில்லை. தற்போது லிப்ரா நிறுவனம் 11.25 கோடி ரூபாய்க்கு தமிழக உரிமையை வாங்கியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய், கார்த்திக் நடித்துள்ள படங்கள் தீபாவளிக்கு வரும் நிலையில் பெரும்பான்மையான திரையரங்குகள் அவர்களது படங்களை திரையிட முன்னுரிமை வழங்கும். இந்த சூழலில் சங்கத்தமிழன் படத்திற்கு போதுமானதிரையரங்குகள் கிடைப்பதில் சிரமம் உள்ளதாக தியேட்டர் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
விஜயா வாஹினி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி ,நிவேதா பெத்துராஜ், ராசி கண்ணா, சூரி, நாசர் ஆகியோர் நடித்திருக்கும் படம் சங்கத்தமிழன்.
கருத்துகள் இல்லை